

மதுராந்தகம்: ஒருமுறை ஏமாந்துவிட்டீர்கள். மாற்றம் என்று சொன்னதை நம்பினீர்கள், ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான் என மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து, மதுராந்தகம் புறவழிச்சாலையில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தத் தேர்தல் வழக்கமான தேர்தல் இல்லை. உங்கள் மேல் திணிக்கப்பட்ட தேர்தல். நான்கு மாதங்களுக்கு முன் நீங்கள் ஒருவரை ஜெயிக்க வைத்தீர்கள். மெஜாரிட்டி இல்லாத இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்காக அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு, திரும்ப வந்து வெட்கமே இல்லாமல் வேற சின்னத்தில் வாக்கு கேட்கிறார்கள்.
அதுவும் 5 ஆண்டுகளாக அவர் எதுவும் செய்யவில்லை என்று, அவரை வைத்துக்கொண்டே சொல்கிறார். அதைச் சொல்லிவிட்டு, அவருக்கே வாக்கு கேட்கிறார். இதைவிட மதுராந்தகம் மக்களான உங்களை கேவலப்படுத்த முடியுமா? தமிழகத்தில் ரிசல்ட் வந்த கையோடு, ஒரு எம்எல்ஏ ராஜினாமா பண்ணுவது இதற்கு முன்னால் நடந்திருக்கிறதா? அப்பட்டமாக நடந்த குதிரை பேரத்தால் இந்தத் தேர்தல் நடக்கிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளை நம்பாமல், அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, மறுபடியும் அவர்களையே நிற்க வைத்து, தவெகவின் சீட் கணக்கைக் கூட்டப் பார்க்கிறார். உறுதியாகச் சொல்கிறேன், இதில் பல்வேறு குதிரை பேரங்கள் நடந்திருக்கின்றன. சில நாள் முன்பு கூட, உதயசூரியன் சின்னத்தில் களம் கண்ட இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா பண்ணிட்டு வந்தால் அமைச்சர் ஆகியிருக்கலாம் என்று, ஒரு அமைச்சரே கூச்சமில்லாமல் இங்கே மேடையில் பேசுகிறார்.
ஒரு பலவீனமான ஆட்சியை அமைத்திருக்கிற கட்சி, முடிந்த வரை நல்லது செய்து, மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும். அப்படித்தான் நான் எதிர்பார்த்தேன் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், ஒரு மாதம் கூட தாங்கவில்லை. எம்எல்ஏக்களை வாங்குகிறார்கள். சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டது. இதுதான் தூய சக்தி ஆட்சியா? இல்லை, இது துயர சக்தி.
நேற்று முதல்வர் இங்கே ஷூட்டிங் எடுக்க வந்தாரே, அப்போது ஒரு சீனில் டீ குடிக்கிற ஷாட். அந்த டீயைக் குடித்துவிட்டு, பந்தாவாக ரூ.500 கொடுத்தார். ஆனால் மக்கள் ஒரு டீக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியுமா. இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு டீ ரூ.10 இப்போது ரூ.15. மளிகைக் கடையில், விலைவாசி பற்றிப் போய்க் கேளுங்கள் சிஎம் சார். அரிசி, சர்க்கரை, காய்கறி உள்பட எல்லா விலையும் ஏறிவிட்டது. அடிக்கடி பேசினார்களே, 5 நிமிடம் பேசினாலே அகிலமே ஆடிப் போய்விடும் என்று பேசிக்கொண்டு இருந்தனர்.
இன்றைக்கு, ஒரு தொகுதியில் வாக்கு வாங்கவே குட்டிக்கரணம் அடிக்கிறார். மதுராந்தகம் மக்கள் படுதோல்வியைப் பரிசாகத் தர வேண்டும். அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள். இந்த ரீல்ஸ் வெறியர்களுக்கு ஒரு ரியாலிட்டி செக் கொடுக்க வேண்டும். நீங்கள் மட்டும்தான் இது மக்களாட்சி என்று சொல்கிறீர்கள். உண்மையில் இது மர்மமான ஆட்சி. யாரோ ஒருத்தரின் கன்ட்ரோலில், யாருடைய நன்மைக்கோ இங்கே கார்ப்பரேட் மாபியா ஆட்சி நடக்கிறது.
எதிலுமே வெளிப்படைத்தன்மை இல்லை. எல்லாம் திரைமறைவில் நடக்கிறது. மக்கள் இனிமேலாவது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஒருமுறை ஏமாந்துவிட்டீர்கள். மாற்றம் என்று சொன்னதை நம்பினீர்கள், ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான். தமிழ்நாடே உங்கள் தீர்ப்புக்குத்தான் வெயிட்டிங், நீங்கள் கொடுக்கிற தண்டனையில்தான் இனி மற்ற தொகுதிகளில் குதிரை பேரம் நடக்குமா, நடக்காதா என்று முடிவாகும். இதை மதுராந்தகம் மக்கள் மறந்துவிட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.