

லண்டன் புறப்பட்டுச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் உற்சாகத்துடன் வழிஅனுப்பி வைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இருவாரகால சுற்றுப்பயணமாக நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதையடுத்து பல்கலை. பட்டமளிப்பு விழாவில் இன்பநிதி பட்டம் பெறுகிறார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, பட்டம் வாங்கும் இன்பநிதியை வாழ்த்துவதற்காக, ஸ்டாலின் நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
இதற்காக ஸ்டாலின், காலை 8.15 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அவரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் வழியனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து, நேற்று காலை 9.50 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக சென்னையில் இருந்து, துபாய் வழியாக ஸ்டாலின் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றுள்ளார். லண்டனில் சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்து விட்டு, ஜூலை 18-ம் தேதி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.