

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக எம்எல்ஏ ரா.மாணிக்கம், விசிக மாவட்டச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசைக் கண்டித்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திமுக எம்எல்ஏ ரா.மாணிக்கம் தலைமையில் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சக்திவேல் ஆர்ப்பாட்டத்தில் வீராவேசமாக முழக்கங்களை எழுப்ப, எம்எல்ஏ மாணிக்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அதை திரும்ப கூறிக் கொண்டிருந்தனர்.
அப்போது மத்திய அரசை கண்டிக்கிறோம் எனகூறுவதாக நினைத்துக் கொண்டு,‘கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம், ஸ்டாலின் அரசை கண்டிக்கின்றோம்’ என விசிக மாவட்டச் செயலாளர் சக்திவேல் ‘டங்க் ஸ்லிப்’ ஆகி கோஷமிட, பழக்கதோஷத்தில் திமுக எம்எல்ஏ மாணிக்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் அதை திரும்பக் கூறிக் கொண்டிருந்தனர். அப்போது, சுதாரித்துக் கொண்ட திமுக குளித்தலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் சந்திரன், விசிக மாவட்டச் செயலாளரிடமிருந்து மைக்கை பிடுங்கி கோஷத்தை மாற்றினார்.
அப்போது தான், தான் செய்த தவறை உணர்ந்து விசிக மாவட்டச் செயலாளர் சக்திவேல், அசடு வழிந்தபடி ‘மத்திய அரசைக் கண்டிக்கிறோம்’ என திருத்திக் கூறினார். அதன்பிறகு தான் திமுக எம்எல்ஏ மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் ‘டங்க் ஸ்லிப்’விஷயம் தெரிய வர, விசிக நிர்வாகியை கடிந்து கொண்டனர். இந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.