

திருச்சி: திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (19). இவருக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் போதை ஊசி போடும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்கள் இருவரும் தம்பதி என தெரிவித்து நேற்று முன்தினம் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர், நேற்று மாலை அறையில் இருந்து பதற்றத்துடன் வெளியே வந்த சதாம் உசேன், தனது மனைவி கட்டிலில் இருந்து கீழே விழுந்து மயங்கிவிட்டார் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்தச் சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த கன்டோன்மென்ட் போலீஸார் உடலை கைப்பற்றினர். விடுதியில் சோதனை நடத்தியபோது, போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. போலீஸார் வழக்குப் பதிந்து, சதாம் உசேனிடம் விசாரித்து வருகின்றனர்.