

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நா.சுரேஷ் முன்னிலையில் அறங்காவலர் குழுத் தலைவராக நேற்று பொறுப்பேற்ற ருக்மணி பழனிவேல்ராஜன்.
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன் நேற்று மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக கருமுத்து தி. கண்ணன் 18 ஆண்டுகள் பதவி வகித்தார். இவர் 2023 மே 23-ம் தேதி காலமானார். இதனால் கோயில் தக்காராக அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் பொறுப்பேற்றார். தொடர்ந்து, 2023 நவ. 6-ல் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன், மாநகராட்சி முன்னாள் உறுப்பினர் து.சுப்புலட்சுமி, தொழிலதிபர் பி.கே.எம்.செல்லையா, டாக்டர் மு.சீனிவாசன், உயர் நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதியின் மனைவி எஸ்.மீனா ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் 2023 டிச.1-ல் அறங்காவலர் உறுப்பினராக பதவியேற்றனர். பின்னர், அறங்காவலர் குழுத் தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜன் 2023 டிச.22-ல் பதவியேற்றார். இவர்களது பதவிக்காலம் 2025 டிசம்பரில் முடிந்தது.
இந்நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே இருந்த அறங்காவலர்களையே மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து 2025 டிச. 30-ல் உத்தரவிட்டது. இந்நிலையில், கோயில் அலுவலகத்தில் நேற்று இணை ஆணையர் நா.சுரேஷ் முன்னிலையில் அறங்காவலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் 5 பேரும் அறங்காவலர்களாக பொறுப்பேற்றனர்.
பின்னர், அறங்காவலர் குழுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் அமைச்சரின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அறங்காவலர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.