

தென்காசி: “சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு வேறு பதில்களை அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு தமிழை சரியாகக் கூட உச்சரிக்கத் தெரியவில்லை” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
விடுதலைப் போராட்ட வீரர் மன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியது: “பூலித்தேவன் நினைவு தபால்தலை வெளியிட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அந்தக் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் அவரது தபால்தலை நிச்சயமாக வெளியிடப்படும்.
பூலித்தேவன் புகழ் இன்னும் வெளிக்கொணரப்படவில்லை என்ற வருத்தமும், ஏக்கமும் மக்களிடம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இதை தெரிவித்து, பூலித்தேவன் புகழை பரப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் முதல்வருக்கு இல்லை. சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு வேறு பதில்களை அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். தமிழை சரியாகக் கூட உச்சரிக்கத் தெரியவில்லை. இதை சட்டப்பேரவை உறுப்பினர் தி.மு.ராஜேந்திரன் கூட்டிக்காட்டியபோது எங்களுக்கு கிறிஸ்தவம்தான் முக்கியம் என்கிறார். அமைச்சர் ஜெகதீஸ்வரி இல்லங்கள் என்பதை இலக்கங்கள் என்று வாசிக்கிறார். தவறை திருத்திக்கொள்ள வேண்டும்.
தஞ்சாவூரில் ஒன்றேமுக்கால் லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படாமல் உள்ளது. அந்த விவசாயிகளுக்கு நிதியை முதல்வர் கொடுப்பாரா? சமூக வலைதளங்களில் ரூட் மாபியாக்கள் பொய்களை பரப்பி வருகின்றனர்” என்றார்.