

உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் |கோப்புப் படம்
நெல்லை: தமிழகத்தில் 2,700 கல்லூரிப் பேராசிரியர்கள் ஒரு மாதத்துக்குள் நியமிக்கப்படுவார்கள் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “தமிழகத்தில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல் போக்கு நிலவியது. தற்போது, முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையே சுமுகமான புரிதல் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இருந்த பிரச்சினை இப்போது ஏற்பட வாய்ப்பு இல்லை.
துணைவேந்தர்கள் நியமனத்தைப் பொறுத்தவரை நீதிமன்ற வழக்குகளால் தாமதப்படுகிறது. மூத்த பேராசிரியர்கள் குழு மூலம் பொறுப்பு துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அழகப்பா மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் பொறுப்பு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 11 பல்கலைக்கழகங்களின் பொறுப்பு துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சிண்டிகேட் அமைக்கப்பட்டு, மூத்த பேராசிரியர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டணக் கொள்கையை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும். அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் விரைவில் தொடங்கும். 2,700 பேராசிரியர்கள் ஒரு மாதத்துக்குள் நியமிக்கப்படுவார்கள். மீதமுள்ள 9 ஆயிரம் காலிப்பணியிடங்கள் 2 ஆண்டுகளுக்குள் நிரப்பப்படும்.
தமிழகத்தில் மாணவர்கள் ரூ.20 லட்சம் வரை எந்தவித பிணையும் இன்றி கல்விக் கடன் பெறும் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். கல்லூரி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன” என்று அமைச்சர் தெரிவித்தார்.