

தஞ்சாவூர்: கும்பகோணம் வட்டம் மாங்குடியில் பழைய தேப்பெருமாநல்லூர் வாய்க்கால் தலைப்பில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் வட்டம் பேட்டை வடக்கு தெருவில் காவேரி ஆற்றில் இருந்து பழவத்தான் கட்டளை வாய்க்கால் பிரிகின்றது அந்த வாய்க்காலில் இருந்து பழைய தேப்பெருமாநல்லூர் வாய்க்கால் பிரிந்து சுமார் 12 கிலோமீட்டர் பயணித்து செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்காலில் கலந்து, பின்னர் பாசன வாய்க்காலாக செல்கிறது.
இந்த நிலையில் பழைய தேப்பெருமாநல்லூர் வாய்க்காலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு காரணங்களால் தூர் வாராமல் போனது. இதனால் பல பகுதிகள் தூர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வாய்க்கால் இருக்கும் தடம் அழிந்து தெரியாமல் போனது.
இதனால் மழைக்காலங்களில் வாய்க்காலில் மழை நீர் செல்லாமல் பக்கவாட்டில் உள்ள வயல்கள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்து பெறும் சிரமத்தை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், வேளாண்மை துறை அமைச்சர் வினோத்திடம், கும்பகோணத்திற்குள் செல்லும் வாய்க்கால்களை உள்ள ஆக்கிரப்புகளை அகற்றி, தூர்வாரி, காவிரி நீரை விட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து சிட்டி யூனியன் வங்கி சமூகப் பொறுப்புணர்வு திட்ட நிதியின் கீழ் பழைய தேப்பெருமாநல்லூர் வாய்க்கால் தூர்வார முடிவு செய்யப்பட்டடது.
அதன்படி, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் அந்த வாய்க்காலில் தூர் வாரும் பணியினை நேற்று தொடங்கி வைத்தார்.
அவருடன் நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் முத்துமணி, உதவி பொறியாளர் கார்த்திகேயன், தமிழக வெற்றி கழக வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாமூதீன், மாநகர செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியது; பல ஆண்டுகளுக்கு பிறகு பழைய தேப்பெருமாநல்லூர் வாய்க்கால் நீர்வளத் துறை பொக்லின் இயந்திரம் மூலம் தூர்வாரப்படுகிறது. இந்த வாய்க்கால் மூலம் கும்பகோணம் நகருக்குள் காவிரி நீர் செல்லும். அதனால் மாநகர பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டும் உயர வாய்ப்புள்ளது. மேலும் 500 ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்திற்கும், மழைக்காலங்களில் மழை நீர் கடைமடை வரை தடையின்றி செல்லும்.
மாங்குடியில் இருந்து கும்பகோணம் மாநகரம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோயில் தெரு வரை நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 8 கி.மீ.தூரத்திற்கு முதற்கட்டமாக தூர்வாரப்படும். அதன் பின் மாநகராட்சி சார்பில் தூர்வார வேண்டும். இந்த பணி 20 நாட்களில் நிறைவடை என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.
வேளாண்மை துறை அமைச்சர் வினோத்திடம், திருப்பதியில் நிதிநிலை அறிக்கை வைத்து வழிபட்ட தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையை குறித்து கேள்வி கேட்டதற்கு, பட்ஜெட் இருக்கிறது என பதில் கூற மறுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.