

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: போக்குவரத்து துறையில் ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் பணிக் காலத்தில் மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய காலத்தில் பணப் பயன்களை வழங்க முடியாத சூழல் கரோனா காலத்துக்கு முன்பாகவே இருந்தது.
நிதி நெருக்கடியால் அந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில், இந்த ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாகபணப் பலன்களை வழங்கி வந்தார்.
அதன் உச்சகட்டமாக கடந்த 2024 ஆகஸ்ட் முதல் 2026 மார்ச் வரையிலான காலகட்டத்தில் மறைந்த, ஓய்வு பெற்ற, ஓய்வு பெற உள்ள 6,867 தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.2,446 கோடி வழங்கியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2021-22-ம் ஆண்டில் 1,241 பேருக்கு ரூ.248 கோடி, 2022-23-ம் ஆண்டில் 5,267 பேருக்கு ரூ.1,339 கோடி, 2023-24-ம் ஆண்டில் 210 பேருக்கு ரூ.32 கோடி, 2024-25-ம் ஆண்டில் 4,740 பேருக்கு ரூ.1,278 கோடி பணப் பலன்களை வழங்கி இருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 24,200 தொழிலாளர்களுக்கு ரூ.7,379 கோடி பணப் பலன்களை முதல்வர் வழங்கியுள்ளார். ஓர் ஆட்சிக் காலத்தில் ஓர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை முடிப்பதே சிரமமாக இருக்கும் சூழலில், இந்த ஆட்சியில் 2 பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
முதல்வரின் நடவடிக்கைகளால், போக்குவரத்து தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி, நம்பிக்கையுடன் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.