“அரசுக்கு எதிரான எந்த தடையையும் முதல்வர் விஜய் சிறப்பாக கையாள்வார்” - அமைச்சர் ஷாஜகான்

அமைச்சர் ஷாஜகான்

அமைச்சர் ஷாஜகான்

Updated on: 
1 min read

நெல்லை: “நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டுமல்ல, அரசுக்கு எதிரான எந்த தடையையும் தமிழக முதல்வர் விஜய் சிறப்பாக கையாள்வார்” என்று தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தவெக தலைமையில் சமூக நீதி வெற்றிக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. முதல்வர் உத்தரவின்பேரில் சிறுபான்மை மக்களை நேரில் சந்தித்து குறைகளைல் கேட்டறிந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கபர்கஸ்தான் மற்றும் கல்லறை தோட்டங்கள் அமைக்க ரூ.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவருவது மிக முக்கியமானது. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் 9 ஆயிரம் கொலைகள் நடந்துள்ளன. கடந்த ஆட்சியில் நடைபெற்ற இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடரக்கூடாது என்பதில் முதல்வர் தீவிர கவனம் செலுத்தி, கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்கள் வேதனை அளிக்கின்றன. அரசு பொறுப்பேற்று 6 மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், இது ஒரு தேனிலவு காலமாகும். கொலை சம்பவங்களுக்கு மது மற்றும் போதை பழக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. பூரண மதுவிலக்கே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் உறுதியான கொள்கை.

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டு மீண்டும் திறந்ததுதான் தற்போதைய சூழலுக்கு முக்கிய காரணம். மது மற்றும் போதைப் பழக்கத்தை முற்றிலும் தடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக தடுக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் மீது இதுவரை எந்த புகாரும் வரவில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த விவகாரம் பேசப்பட்டு வருகிறது. அவர் மீது தவறு இருப்பது தெரியவந்தால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

துறையூர் சட்டப்பேரவை உறுப்பினர் தொடர்பாக வெளியாகியுள்ள காணொலி திட்டமிட்டு பரப்பப்படுகிறதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டுமல்ல, அரசுக்கு எதிராக வரும் எந்த தடையையும் முதல்வர் சிறப்பாக கையாள்வார்” என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ஷாஜகான் </p></div>
சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு

X