புதிய வக்பு வாரிய சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது: அமைச்சர் ஷாஜஹான் உறுதி

புதிய வக்பு வாரிய சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது: அமைச்சர் ஷாஜஹான் உறுதி
Updated on
1 min read

சென்னை: புதிய வக்பு வாரிய சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப் படாது என்று, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் தெரிவித்தார்.

புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுவிட்டு யாத்திரிகர்கள், சென்னை திரும்பத் தொடங்கியுள்ளனர். மதினாவில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தனி விமானத்தில் முதல்கட்டமாக நேற்று சென்னை திரும்பிய 410 யாத்திரிகர்களை, தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் விமான நிலையத்தில் வரவேற்றார்.

மாநிலங்களவை உறுப்பினர் நவாஸ்கனி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் ஷாஜகான் கூறிய தாவது: இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 6,295 பேர் ஹஜ் யாத்திரை சென்றனர்.

ஹஜ் பயணிகள் வசதிக்காக, சென்னை விமான நிலையம் அருகே ரூ.40 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஹஜ் இல்லம் அடுத்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

ஏற்கெனவே, புதிய வக்பு வாரிய சட்டத்தை தமிழகத்தில் முந்தைய அரசு செயல்படுத்தவில்லை. இந்த அரசும் செயல்படுத்தாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

வக்பு சொத்துகளை பதிவேற்றம் செய்யும் காலக்கெடு நிறைவடைந்த நிலையில், அதை மறுபரிசீலனை செய்ய, காலக்கெடுவை மேலும் நீட்டிக்க, மத்திய அரசிடம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய வக்பு வாரிய சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது: அமைச்சர் ஷாஜஹான் உறுதி
சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in