

அமைச்சர் ரமேஷ்
படம்: ர. செல்வமுத்துகுமார்
திருச்சி: “மாணவச் செல்வங்களிடம் எந்த பிரிவினையும் பாகுபாடும் பார்ப்பது இல்லை. அனைவருக்கும் தேவையானதை முதல்வர் செய்து கொடுப்பார்” என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கேக் வழங்கும் நிகழ்வை தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 2.50 லட்சம் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் என மொத்தம் 2.64 லட்சம் பேருக்கு 5.28 கேக்குகள் வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மாணவர் செல்வங்களுக்கு மகிழ்ச்சியான கல்வி சூழலை தருவதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழக முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை முதல்வர் வழங்கியுள்ளார்” என்றார்.
தீபாவளி பொது விடுமுறை மற்றும் கேக் வழங்கும் திட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளனரே எனக் கேட்ட போது, “ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியருக்கு முதல் முறையாக இந்த திட்டத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளார்.
இந்த கருத்து முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு எதிர்காலத்தில் மாற்றங்கள் தேவைப்பட்டால் முதல்வர் நிச்சயம் அதை முன்னெடுப்பார். எல்லா மாணவர்களையும் எல்லா குழந்தைகளையும் ஒருசேர தாய் உள்ளத்தோடு முதல்வர் விஜய் அரவணைக்கிறார்.
மாணவச் செல்வங்களிடம் எந்த பிரிவினையும் பாகுபாடும் பார்ப்பது இல்லை. அனைவருக்கும் தேவையானதை முதல்வர் செய்து கொடுப்பார். தூய்மையற்ற பள்ளி வளாகங்கள், எந்தெந்த பள்ளிகளுக்கு அடிப்படை வசதி தேவை என்பது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிக்கை தயார் செய்து வருகின்றனர். விரைவில் அனைத்துப் பள்ளிகளும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து திட்டங்களையும் மக்களிடமும் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அதில் எங்காவது சிறு குறைபாடு இருக்கத்தான் செய்கிறது. அது எங்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.