திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷுக்கு இந்து முன்னணி பாராட்டு

திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷுக்கு இந்து முன்னணி பாராட்டு
Updated on
1 min read

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், திருச்செந்தூருக்கு சாதாரண முறையில் சென்று கோயிலில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதையும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதையும் வரவேற்பதாகவும், பாராட்டுவதாகவும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இன்று திருச்செந்தூருக்கு சாதாரண முறையில் சென்று கோயிலில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை வரவேற்கிறோம்; பாராட்டுகிறோம்.

இதே கோயிலில் கட்டுக்கட்டாக காணிக்கை பணத்தை அதிகாரிகள் அலட்சியமாக எடுத்து செல்லும் விடீயோ சமூக ஊடகங்களில் வெளியாகியது. மேலும் தரிசன கட்டணம் போலி ரசீது மூலமாக ரூ.25 லட்சத்தை அதிகாரிகள் சுருட்டிய செய்தியும் வந்தது.

இதனைக் கண்டித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமையில் ஒற்றை காலில் நின்ற போராட்டம் நடைபெற்றது.

மேலும், ராமேஸ்வரம் கோயிலில் பிரசாத முறைகேட்டில் பல கோடி ரூபாய் திருடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோல் திருவண்ணாமலை, பழனி, திருத்தணி, ராமேஸ்வரம் உள்பட பல நூறு கோயில்களில் ஏராளமான முறைகேடுகளும், விலையுயர்ந்த பொருட்கள் களவுபோனதும் நடந்து அவற்றின் மீதான புகார்களை கடந்த திமுக அரசு மூடி மறைத்தது.

காஞ்சிபுரம் கோயில் தங்க கவசத்தில் தங்கம் திருடப்பட்டது. தங்கம் உருக்கி டெபாசிட் செய்ததிலும் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன.

எனவே, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திருக்கோயில் சம்பந்தப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகள் மற்றும் இறைவன் திருமேனிகள் கடத்தப்பட்ட வழக்குகள் குறித்து முழுமையான சட்ட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அது சம்பந்தமான தற்போதைய நிலை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். இல்லை என்றால் தமிழக வெற்றிக் கழகம் வெற்று விளம்பரத்திற்காக நடிப்பதாக மக்கள் கருதுவார்கள்.

இது ரீல் அரசு என விமர்சிப்பவர்களுக்கு இது ரீல் அரசு அல்ல, ரியல் அரசு என்பதை இந்து சமய அறநிலையத்துறையில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷுக்கு இந்து முன்னணி பாராட்டு
ஆசிய போட்டிக்கான தேர்வில் பங்கேற்க வினேஷ் போகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in