

அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: “முதல்வர் விஜய் எங்கு கலந்துகொள்வார், என்ன செய்வார் என்பதை முதல்வரின் அலுவலகம் அல்லது அவரே அறிவிப்பார். இதில் யார் சொல்வதும் உறுதி செய்த தகவல் கிடையாது” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள். புதிய மாணவர்களை வரவேற்கிறேன். இந்த புதிய மகிழ்ச்சியான தகவல் இப்போதுதான் வந்தது. தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரத்தை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
பின்னர், முதல்வர் விஜய் கர்நாடகா முதல்வரை நேரில் சென்று சந்திக்கிறா என்ற கேள்விக்கு, “முதல்வர் விஜய் எங்கு கலந்துகொள்வார், என்ன செய்வார் என்பதை முதல்வரின் அலுவலகம் அல்லது அவரே அறிவிப்பார். இதில் யார் சொல்வதும் உறுதி செய்த தகவல் கிடையாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு, “நான் செய்தியாளர்களின் துறைக்கான அமைச்சர். எந்தக் கட்சியினராக இருந்தாலும் என் சொந்தக் கட்சியினராக இருந்தாலும் பத்திரிகையாளர் மீது வன்முறை நிகழ்த்துவதை எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மைத் தன்மையை விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். கட்சி ரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.