

தமிழகத்தில் 2029-ம் ஆண்டுக்குள் 10 கிகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்புத் திறன் உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு கொள்கை - 2026 புத்தகத்தை மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் நேற்று வெளியிட்டார். உடன் மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள்.
சென்னை: தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், முதலீட்டாளர்களுக்கு எளிமையான, வெளிப்படையான சேவைகளை வழங்கவும் தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு கொள்கை 2026-ஐ மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சென்னையில் நேற்று வெளியிட்டார். மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளத்தையும் அறிமுகப்படுத்தினார்.
தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு கொள்கை – 2026-ன் படி 2029-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 10 கிகாவாட்மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இக்கொள்கையின் கீழ், தனித்த மின்கல ஆற்றல் சேமிப்புத் திட்டங்கள், சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களுடன் ஒருங்கிணைந்த சேமிப்புத் திட்டங்கள், மின்பரிமாற்றம் மற்றும் விநியோகக் கட்டமைப்புகளுக்கு ஆதரவான திட்டங்கள் ஆகியவற்றுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தகுதியுடைய திட்டங்கள் வணிக ரீதியாக செயல்படத் தொடங்கும் நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மின்கடத்தல் மற்றும் மின்பரிமாற்றக் கட்டணங்களில் 100 சதவீத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டங்களுக்குத் தேவையான மின்கட்டமைப்பு இணைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆதரவு ஆகியவற்றை அரசு வழங்குவ தன் மூலம் தனியார் முதலீடுகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் ஊக்குவிக்கப்படும்.
மேலும் சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை மின் திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கான மின்கட்டமைப்பு இணைப்பு அனுமதியை எளிமைப்படுத்தவும், காலதாமதத்தை குறைக்கவும், சூரிய மின்சாரம், காற்றாலை, காற்றாலை–சூரிய ஆற்றல் ஒருங்கிணைந்த திட்டங்கள் மற்றும் மின்கல ஆற்றல் சேமிப்புத் திட்டங்களுக்கான ஒற்றைச்சாளர இணையவழி விண்ணப்ப வலைதளம் (https://nces.tngecl.org/nces/main.php) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறும்போது, “மேற்கூரை சூரியசக்தி திட்ட வலைதளம் வீடுகளுக்கானது. இதில் எத்தனை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன, எத்தனை அனுமதிகள் கொடுக்கப்படுகின்றன மற்றும் மின் திட்டங்களின் திறன் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை வெளியிடப்படும்” என்றார்.