

சென்னை: “மின்துறை பிரச்சினைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினின் அறிக்கைக்கு உரிய பதில் அளிக்காமல், தேவையற்ற விமர்சனங்களில் ஈடுபடுவது சரியான அரசியல் அணுகுமுறை அல்ல. அமைச்சர் நிர்மல் குமார் இனிமேல் இத்தகைய நையாண்டி பேச்சை தவிர்த்து, மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க வேண்டும்” என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர், “தமிழ்நாட்டில் தற்போது எழுந்துள்ள மின்கட்டண உயர்வு தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களது தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த தமிழ்நாடு மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல், திசை திருப்பும் வகையில் பேசியுள்ளார்.
கேள்வி கேட்ட நிருபர்களில் ஒருவரே, என்னுடைய நண்பரின் வீட்டிற்கே கூடுதல் மின் கட்டணம் வந்திருக்கிறது” என்று கூறினார். அதற்குப் பதில் சொல்லாமல், “வாட்ஸ்அப்பில் வந்த செய்தியை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்” என்று அமைச்சர் கூறுகிறார்.
வாட்ஸ்அப்பில் வந்த செய்தியைப் பார்க்கக் கூடாதா?. இன்ஸ்டாகிராமில் வந்த செய்தியைத்தான் பார்க்க வேண்டுமா? இன்ஸ்டாகிராமில் வந்தால் நம்பகமானது, வாட்ஸ்அப்பில் வந்தால் நம்பகமற்றதா?
என்னிடமும் ஒரு வாட்ஸ்அப் செய்தி இருக்கிறது. அதில் தமிழ்நாடு மின்வாரியத்தின் சிஎம்டி அருண்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “In view of widespread complaints regarding high electricity bills during the month of July, Tamil Nadu Electricity Board has decided to conduct a re-inspection of high variation in consumption cases through responsible senior officers” என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.
இதைப் பார்த்து பேசக்கூடாதா? இதை ஆதாரமாகக் கொண்டு கருத்து சொல்லக்கூடாதா? ஒரு பொறுப்பான அமைச்சர், கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், எதிர்க்கட்சியினரை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசுவது சரியல்ல.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரின் அரசியல் அனுபவம், வயது, வகித்த பதவிகள் ஆகியவற்றை அறிந்த பிறகே அவர் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும். இன்று நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. அந்தப் பொறுப்பை சிறப்பாகச் செய்ய வேண்டும்; அதற்கான வாழ்த்துகள். ஆனால், அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி தேவையற்ற விமர்சனங்களில் ஈடுபடுவது பொருத்தமல்ல.
நிர்மல் குமார் பல துறைகளில் கருத்து சொல்லும் பல்வேறு திறன்களைக் கொண்ட அமைச்சர் ஆகவும், அமைச்சரவையின் அரசின் குரலாகச் இருக்கும் அமைச்சர் ஆகவும் செயல்படுகிறார்.
ஒரு நாள் மருத்துவம் குறித்து பேசுவார்; மற்றொரு நாள் தச்சு வேலை, பிளம்பிங் போன்றவற்றை தொழிலாகத் தேர்வு செய்யுமாறு ஆலோசனை வழங்குவார்; பிறகு சட்டத் துறையைப் பற்றிப் பேசுவார். ஆனால், தன்னுடைய துறையில் வெளியாகியுள்ள சிஎம்டி-யின் அதிகாரப்பூர்வ அறிக்கையே அவருக்குத் தெரியாமல் பேசுவது வருத்தமளிக்கிறது.
“எந்தப் புகாரும் வரவில்லை” என்று அவர் கூறுகிறார். ஆனால் சிஎம்டி அறிக்கையில் பரவலான புகார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புகார்கள் இல்லையென்றால், மீள் ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?.
ஒருபுறம் “புகாரே வரவில்லை” என்கிறார்; மறுபுறம் ஆய்வு நடத்த உத்தரவிட்டதாகச் சொல்கிறார். இது முரண்பாடான நிலைப்பாடு அல்லவா?
முதலில் மின்துறை எவ்வாறு இயங்குகிறது, அதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பதை ஒரு மாதமாவது, இரண்டு மாதமாவது முழுமையாக ஆய்வு செய்து, அதன் பிறகு பேட்டியளிக்க வேண்டும்.
மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்று கேட்டால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் கூறுகிறார். ஒரு நாள் அதிகாரிகளையே குற்றம்சாட்டுகிறார். மற்றொரு நாள் எதிர்க்கட்சியினரே ஃபியூஸ் கேரியர்களை திருடிச் சென்றதாகச் சொல்கிறார். பிறகு பராமரிப்பு பணிகள்தான் காரணம் என்கிறார். இவ்வாறு மாறிமாறி காரணங்களைச் சொல்வதற்குப் பதிலாக, முழுமையான ஆய்வு நடத்தி உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.
மின்துறை என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நேரடியாக தொடர்புடைய மிக முக்கியமான துறை. சில நாட்களுக்கு முன் தொழில் முனைவோர்களைச் சந்தித்தபோது, “இப்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது; எப்போது மின்சாரம் போகும், எப்போது வரும் என்று தெரியவில்லை” என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
எனவே, பிறருக்கு அறிவுரை கூறுவது, நையாண்டி செய்வது போன்றவற்றை விடுத்து, மக்களின் பிரச்சினைகளை நேரில் ஆய்வு செய்து, தீர்வு காணும் நடவடிக்கைகளில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். சிஎம்டி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையையே அடிப்படையாகக் கொண்டு, “புகார்கள் வந்துள்ளதால் ஆய்வு நடத்துகிறோம்” என்று வெளிப்படையாகச் சொல்லலாம். அதற்கு பதிலாக உண்மையை மறைத்து, முரண்பட்ட விளக்கங்களை அளிப்பதால் எந்தப் பயனும் இல்லை.
மொத்தத்தில், இந்த அரசு பல பிரச்சினைகளை மறைத்து சமாளிக்க முயல்கிறது என்ற எண்ணமே மக்களிடம் உருவாகியுள்ளது. முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை, பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு நேரடியாக பதில் அளித்து, அவற்றைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே நல்லாட்சிக்கான அடையாளமாக இருக்கும்.
தவிர்க்க முடியாத, உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பொதுமக்களின் பிரச்சினைகள் இன்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள்தான் ஆகிறது என்பதற்காக அதை விமர்சிக்கக் கூடாது என்று கூறுகிறார்கள்.
நாங்களும் காரணமில்லாமல் விமர்சிக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றி பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் நாங்களும் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களாக, அவர்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது எங்கள் கடமை.
அந்தக் கடமையின் அடிப்படையில்தான் எங்கள் தலைவர் மின்துறை பிரச்சினைகள் குறித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கைக்கு உரிய பதில் அளிக்காமல், தேவையற்ற விமர்சனங்களில் ஈடுபடுவது சரியான அரசியல் அணுகுமுறை அல்ல. அதனால், அமைச்சர் நிர்மல் குமார் இனிமேல் இத்தகைய நையாண்டி பேச்சை தவிர்த்து, மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தனது இயலாமையை மறைக்க திட்டங்களின் பெயரை மாற்றி வருகிறார் முதல்வர் விஜய். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனைகளை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியும் என்று இந்த அரசு நினைக்கிறது. ஆனால் அது சாத்தியமல்ல. தேர்தலில் கிடைத்த வெற்றியை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களே முழுமையாக தங்களது செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்கள் என்று கருதுவது தவறான எண்ணம்.
அதனால்தான் இன்று திட்டங்களின் பெயர்களை மாற்றுவது, நிறங்களை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், தாயுமானவர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம், அவற்றின் வரலாற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைப்பது தவறாகும். உண்மையில், அந்தத் திட்டங்களைப் பார்த்தாலே முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுதான் மக்களுக்கு நினைவிற்கு வருகிறது.
அதேபோல், இணையதளங்களின் நிறங்களை மாற்றுவது, பெயர்களை மாற்றுவது போன்றவை ஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய வேலைகள். ஆனால் ஆட்சி மாறினால் அவை மீண்டும் மாற்றப்படலாம். மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பெற வேண்டுமென்றால், பெயர் மாற்றங்களால் அல்ல; மக்கள் நலனுக்காகச் செய்யப்படும் திட்டங்களாலும் செயல்பாடுகளாலும் மட்டுமே முடியும்.
இன்றும் மக்களைக் கேட்டால், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், உரிமைப் பெண் திட்டம் போன்றவை மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் கொண்டு வரப்பட்டவை என்று கூறுவார்கள். அதைப் போலவே, தமிழ்நாட்டுக்கு “தமிழ்நாடு” என்ற பெயரை வழங்கியவர் அண்ணா என்பதையும், மாநில முன்னேற்றத்தில் கருணாநிதியின் பங்களிப்பு என்ன என்பதையும் மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். வரலாற்றில் பெயர் பெற வேண்டுமென்றால் செயல்களால் பெற வேண்டும்; பெயர் மாற்றங்களாலும், நிறம் மாற்றங்களாலும் அல்ல.
மின்வெட்டு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள் என்பதையே பலவீனமாகக் கருதி அரசு செயல்படக் கூடாது. மேலும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் அமைச்சர்களே முரண்பட்ட கருத்துகளை வெளியிடுவது அரசின் ஒருங்கிணைப்பின்மையைக் காட்டுகிறது. ஒரு அமைச்சர் ஒரு கருத்தைக் கூற, மற்றொரு அமைச்சர் அதை மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் இங்கே வர வேண்டாம் என கர்நாடகா முதல்வர் கூறுகிறார் அப்படி என்றால் இங்கிருந்து யாராவது முதல்வர் விஜய் அங்கு வர இருப்பதாக தெரிவித்திருக்க வேண்டும் அதனால் தான் தற்போது வர வேண்டாம் என அந்த முதல்வர் கூறுகிறார். இந்த விவகாரத்தில் இப்படி மறைத்து மறைத்து பேச வேண்டிய அவசியம் என்ன?
தவெக கூட்டணி கட்சிகளே அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் இப்போதும் கள்ள மவுனம் காத்து வருகிறது இந்த அரசு. எல்லாவற்றிற்கும் அமைதியாக இருப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பிரச்சினை வெடிக்காது என நினைக்கின்றனர். ஆனால் அந்த அமைதியே ஒருகட்டத்தில் அரசிற்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் புரட்சியாக வெடிக்கும்” என்றார்.