

காடேஸ்வரா சுப்பிரமணியம்
கோப்புப் படம்
மதுரை: “முதல்வர் விஜய்யை அமைச்சர் நிர்மல் குமார் தவறாக வழிநடத்தி வருகிறார்” என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப தரிசனத்துக்காக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மதுரை வந்திருந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. சுமார் 100 ஆண்டுக்கும் மேலாக போராடுகிறோம். கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தி நல்ல தீர்ப்பை பெற்றுள்ளோம்.
கடந்த திமுக அரசு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறைவேற்றவில்லை. அவமதிப்பு செய்ததால் ஆட்சியரும், மாநகர காவல் ஆணையர் மன்னிப்பு கேட்டனர். அதேபோல், தற்போதைய தவெக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றம் தற்போது ஒரு நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், இந்த தவெக அரசு அவமதிப்பு செய்தது.
இதன்மூலம் தமிழகத்துக்கும் மிகப் பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்போடு கார்த்திகை தீபம் ஏற்றும் சூழலை தவெக அரசு உருவாக்கியுள்ளது. இந்து மக்களுக்கு விரோதமாக அமைச்சர் நிர்மல் குமார் செயல்படுகிறார். தேர்தலின்போது வெறும் விஜய், இப்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யாக மாறினார். தற்போது விஜய்யை எடுத்துவிட்டு ஜோசப் ஆக மாறியிருக்கிறார்.
அவருடன் இருக்கும் கூட்டணி கட்சியினர் கடவுள் மறுப்பு கொள்கையுடையவர்கள், நக்சலைட் சிந்தனையுடையவர்கள். அவர்களது அழுத்தத்தால் முதல்வர் இவ்வாறு செயல்படுகிறார். அமைச்சர் நிர்மல் குமார், தமிழக முதல்வரை தவறாக வழி நடத்துகிறார்.
13 அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. அமைச்சர் நிர்மல் குமாருக்கும் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். நிர்மல் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வரும் ராஜினாமா செய்ய வேண்டும். ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நின்று ஜெயிக்கட்டும். அவர்களுக்கு மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என பார்ப்போம்” என்று அவர் கூறினார்.