“குடும்பத்தைக் காப்பாற்ற பாஜக உதவியை நாடுகிறது திமுக” - அமைச்சர் நிர்மல் குமார்

“குடும்பத்தைக் காப்பாற்ற பாஜக உதவியை நாடுகிறது திமுக” - அமைச்சர் நிர்மல் குமார்
Updated on
2 min read

சென்னை: “வழக்குகளில் இருந்து குடும்பத்தைக் காப்பாற்ற பாஜகவின் உதவியை திமுக நாடுகிறது” என்று சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறக்க கர்நாடகா தொடர்ந்து மறுக்கிறது. இதையடுத்து, 37 டிஎம்சி திறக்க கோரி தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 17-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. முதல்வர் வழிகாட்டுதலின்படி, தமிழக உரிமையை நிலைநாட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மக்களவைத் தலைவர் அளித்த தேநீர் விருந்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றது குறித்து கேட்கிறீர்கள். திமுக ஏற்கெனவே பாஜகவுடன் ரகசிய கூட்டணியில்தான் இருந்தது. தற்போது நேரடியாகவே இருக்கிறார்கள். திருச்சி சிவா விரைவில் மத்திய அமைச்சராவார் என எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

கடந்த 2001-ல் இருந்த மனநிலைக்கு திமுக வந்துவிட்டது. வழக்குகளில் இருந்து குடும்பத்தைக் காப்பாற்றவும் பாஜகவின் உதவியை திமுக நாடுகிறது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் சட்டப்பேரவையில் தீர்மானத்தை ஆதரித்த திமுக, ‘நாடாளுமன்றத்தில் அந்த மசோதா வந்தால் எதிர்த்து வாக்களிப்போம்’ என்று இதுவரை ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

திமுக ஆட்சியின்போது கட்சி நிதி போன்ற சிக்கல்கள் இருந்ததால், முதலீட்டாளர்கள் தமிழகம் வர தயங்கினர். லூலூ மால் போன்ற ஷாப்பிங் காம்ப்ளக்ஸை கொண்டு வந்ததை எல்லாம் பெரிய முதலீடு என்றனர். தற்போது அந்த நிலை மாறி, வெளிப்படைத் தன்மை வந்துள்ளதால் பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தாமாக முன்வருகின்றன.

கடந்த காலங்களில் வாகன பேன்சி நம்பர் மூலம் கட்சி நிதி வசூலித்தது, டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்தது ஆகியவை தடுக்கப்பட்டு, வெளிப்படையான ஏல முறையில் கொண்டு வந்ததன் மூலமாக மட்டும் தற்போது அரசு கஜானாவுக்கு ரூ.15,000 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மின்வாரியம், டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்களின் அடிப்படையில்தான் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. யாரும் தப்பிக்க முடியாது. சொத்து வரி உயர்த்தப்பட்டதாக திமுக தவறான பிரச்சாரத்தை செய்து வருகிறது. முந்தைய திமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் தற்போது மறுமதிப்பீடு செய்யப்படுகின்றன.

கோவையில் சீனியர் - ஜூனியர் தகராறால் கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் வருத்தத்துக்குரியது. கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, தேர்வு எழுத மட்டும் அவருக்கு அனுமதி அளித்திருந்தனர். நண்பர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கொலை நடந்துள்ளது. குற்றவாளிகள் மீது காவல் துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் போதைப் பொருள் புழக்கம் அதிகம் காணப்பட்டது. இதை ஒடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதிமுக போராட்டம் நடத்துவது கண்துடைப்பு. தன்னுடன் 10 எம்எல்ஏக்களுக்கு மேல் உள்ளனர் என்ற பலத்தைக் காட்டவே பழனிசாமி போராட்டம் நடத்துகிறார். சட்டப்பேரவையில் அவர் பேசினால் திமுக ஆதரிக்கிறது. திமுக பேசினால் அவர் ஆதரிக்கிறார். இண்டியா கூட்டணி கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.

“குடும்பத்தைக் காப்பாற்ற பாஜக உதவியை நாடுகிறது திமுக” - அமைச்சர் நிர்மல் குமார்
“12,525 கிராம சபைகளிலும் பங்கேற்பீர்” - ‘வி த லீடர்ஸ்’ தொண்டர்களுக்கு அண்ணாமலை வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in