

சென்னை: காவிரி விவகாரத்தில் தீர்வு காண முதல்வர் விஜய் பல வழிகளில் முயற்சி மேற்கொண்டாலும், திமுக கர்நாடக முதல்வருடன் இணைந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் நேற்று கூறியதாவது: தமிழக முதல்வர் விஜய் தனிமைப்பட்டு நிற்பதாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முதல்வரை தனிமைப்படுத்த வேண்டும் என்றே, கர்நாடக முதல்வருடன் சேர்ந்து திமுக செயல்பட்டதுபோல தெரிகிறது. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும், திமுக குடும்பத்துக்கும் நெருங்கிய உறவு உள்ளது. காங்கிரஸ் தலைமையைவிட திமுக தலைமை சொல்வதைக் கேட்டுதான் சிவகுமார் செயல்படுவார்.
தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்த விவகாரத்தில், பிடிபட்ட பெரும்பாலான பணம், பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு வந்தவை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என்று பல வகைகளில் முட்டுக்கட்டை போட்டார் கருணாநிதி.
அதேபோலதான் திமுக இப்போதும் செய்கிறது. காவிரி விவகாரத்தில் தீர்வு காண முதல்வர் விஜய் பல வழிகளில் முயற்சி மேற்கொண்டாலும், திமுக கர்நாடக முதல்வருடன் இணைந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
காவிரி பிரச்சினையில் கடந்த 30 ஆண்டுகளாக திமுகவின் குழப்பத்தால்தான் தமிழகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. முதல்வர் ஆலோசனை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்தார்.
திமுகவும் வழக்கு பதிவு செய்துள்ளது. இதுபோல ஒரே மாநிலத்தில் இருந்து தனித்தனியாக பல வழக்குகள் பதிவு செய்வது குழப்பத்தையே விளைவிக்கும். அதிமுகவும் இதேபோலதான் செயல்படுகிறது.
ஜெயலலிதா எவ்வளவு உறுதியாக முடிவு எடுப்பாரோ, அதற்கு நேர் மாறாக தற்போதைய அதிமுக, கர்நாடக பாஜகவின் ஆதரவாக செயல்படுகிறது. மேகேதாட்டு அணை தொடர்பாக சட்டப்பேரவையில் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதிமுக கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்தது.
இதுபோன்ற நிலைப் பாட்டில் உள்ளவர்களை வைத்து எப்படி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடியும். முதல்வருக்கு நெருக்கடி கொடுப்ப தாக நினைத்து தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
கபினி அணையில் இருந்து கர்நாடக அரசு இப்போது திறந்து விட்ட நீர் நமக்கு போதுமானதாக இல்லை. தமிழகத்துக்கு 17 டிஎம்சி தண்ணீர் வேண்டும். ஆனால், உபரி நீரை திறந்துவிட்டு கணக்கு காட்டுவதை ஏற்க முடியாது. தமிழக நலனைப் பாதுகாக்க, உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆக.3-ம் தேதி (இன்று) வழக்கு தொடரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.