

நிதியமைச்சர் மரிய வில்சன்
கோப்புப் படம்
சென்னை: “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் கட்டமைத்து வருகின்றன. முதல்வர் விஜய் இரும்புக் கரம் கொண்டு அனைத்தையும் அடக்குவார்” என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் கட்டமைத்து வருகின்றன. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து செயல்பட திட்டம் தீட்டினர். தற்போது இவ்வாறு பேசி வருகின்றனர்; இது ஒன்றும் புதிது கிடையாது.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து முதல்வர் விஜய் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். இரும்புக் கரம் கொண்டு அனைத்தையும் அடக்குவார் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
50, 60 ஆண்டுகளாக இருந்த ஊழலை 6 மாதங்களில் குறைத்து, தற்போது தமிழகத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அதேபோல சட்டம் - ஒழுங்கு பிரச்சினையையும் சரிசெய்வார்.
அனைத்து விஷயங்களையும் சட்டப்படிதான் செய்ய வேண்டும். குற்றம் புரிந்தவர்களை உடனே துப்பாக்கியால் சுடுவது, மாவு கட்டுப் போடுவது ஆகியவை தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.
ஊழல் மற்றும் போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை கொண்டுவருவதாக முதல்வர் வாக்குறுதி கொடுத்தார். இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் அனைத்தும் சரியாகிவிடும்” என்று அவர் கூறினார்.