

சென்னை: பட்டாசு ஆலைகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டதன் மூலம் பட்டாசு தொழிலாளர் நலனை தவெக அரசு காப்பாற்றியுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு பேசியதாவது:
தீபாவளிக்கு முன்பாக..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டத்துக்கு உட்பட்டு, முறையான அனுமதி பெற்று இயங்கி வரும் பட்டாசு ஆலைகள், விற்பனை நிலையங்களில் தீவிர ஆய்வு என்ற பெயரில் நடத்தப்படும் சோதனைகளால் பட்டாசுத் தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி நெருங்கும் நிலையில், இதுகுறித்து அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கூறியதாவது:
6 மாதங்களாக ஆய்வு
கடந்த ஜனவரி முதல் ஜூலை 13-ம் தேதி வரை 6 மாதங்களாக இந்த ஆய்வு நடந்து வருகிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. தவெக அரசு அமைந்த பிறகு தொடர்ச்சியாக 4-5 விபத்துகள் நேரிட்டன. அதனால்தான் தீவிர ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 177 பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்தி ஜூலை 11-ம் தேதிக்கு முன்பு சரிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன் பிறகு, 49 நிறுவனங்கள் மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. தொழிலகப் பாதுகாப்பு இயக்குநரகம் சார்பில் 120 நிறுவனங்களும் குறைபாடுகளை சரிசெய்துள்ளதாக தெரிவித்து மீண்டும் இயக்க அனுமதிக்கப்பட்டது.
இதன்மூலம் பட்டாசுத் தொழிலாளர்கள் நலனை தவெக அரசு காப்பாற்றியுள்ளது. இதனால், பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பாக மட்டுமின்றி மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.