

விருதுநகர்: “மகளிருக்கு மாதம்தோறும் வழங்கும் உரிமைத் தொகையை ரூ.2,500 உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது வழங்கப்படும்” என்று சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் செல்வம் (விருதுநகர்), கார்த்திக் (ஸ்ரீவில்லிபுத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு 3,428 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், “விருதுநகர் மாவட்டத்தில் வெற்றிபெற்றுள்ள நாங்கள் நால்வரும் இந்த மாவட்டத்தின் 4 தூண்களாக இருந்து மக்கள் பணியாற்றுவோம். மக்களின் கோரிக்கைகள், தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்” என்றார்.
சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகையில், “நாங்கள் ஒற்றுமையாக பயணிக்கிறோம். சகோதரி கீர்த்தனாவுக்கும், எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாக இணைந்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.
நாங்களும், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் மட்டுமின்றி எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருந்து விருதுநகர் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
மாதந்தோறும் மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது வழங்கப்படும்.
அதோடு, ‘விஜய் விஜயம்’ என்ற ஆப்- ஒன்றையும் கடந்த வாரம் ராஜபாளையத்தில் அறிமுகம் செய்துவைத்தேன். மக்கள் எந்த கோரிக்கையாக இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் வரத்தேவையில்லை. இந்த ஆப்- மூலம் தெரிவித்தால் போதும், 24 மணி நேரத்திற்குள் அதற்கான பதில் அளிக்கப்படும். விரைவில் சிவகாசியிலும் மற்ற தொகுதிகளிலும் இந்த சேவை தொடங்கப்படும்.” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் உள் விளையாட்டு அரங்கையும் அமைச்சர்கள் திறந்துவைத்தனர். முன்னதாக, சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதிக்கான காசோலைகளையும் அமைச்சர்கள் வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.