

சென்னை: ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 831 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சென்னை, கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 831 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சித்ரா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, குடும்பநலத் துறை இயக்குநர் சத்யா மற்றும் கூடுதல் இயக்குநர்கள், செவிலியர்கள் மற்றும் செவிலியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களில், அவர்களது ஆட்சியில், 1,600 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
ஆனால், நான்காரை ஆண்டு திமுக ஆட்சியில் 5,825 பேர் பணி நிரந்தரம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 5,932 பேர் பணி நிரந்தரம் செய்ய வேண்டியுள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அப்போது இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
ஊதிய உயர்வு வழங்கப்படும்: தற்போது பணி நியமன ஆணை வழங்கப்பட்டவர்கள், பொங்கலுக்கு பின் கலந்தாய்வு மூலமாக அவர்கள் பணியாற்றும் இடங்களை தேர்வு செய்யலாம். இந்த விவகாரத்தில் இடைத்தரகர்களை யாரும் நம்ப வேண்டாம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 1,325 பகுதி நேர மகப்பேறுபணியாளர்கள் மாதம், ரூ.1,500 மட்டுமே சம்பளம் பெறுகின்றனர்.
அவர்கள் தங்களுக்கு, ரூ.5,000 உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் கோரிய தொகையை விட கூடுதலாக அவர்களுக்கான ஊதிய உயர்வு வழங்கப்படும். வரும் 19-ம் தேதி அவர்களிடத்திலேயே அறிவிக்கப்படும். இந்த 4 ஆண்டுகளில், 37,603 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில், 17,000 புதிய பணியிடங்களை உருவாக்கியிருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.