

தாமோதர கிருஷ்ணன் கோபுரத்தை நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்த அமைச்சர் ரமேஷ். உடன் ஆட்சியர் பிரத்திக் தாயள் உள்ளிட்டோர். படம்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட தாமோதர கிருஷ்ணன் கோபுர வழிப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று அமைச்சர் ரமேஷ் திறந்துவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 21 கோபுரங்களில் ஒன்றான தாமோதர கிருஷ்ணன் கோபுரத்தின் மராமத்துபணிகள் 2023-ல் தொடங்கி, தற்போது பணிகள் முடிந்து மக்கள்பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு சட்டப் போராட்டங்கள் மூலம் பழநி கோயில் நிலத்தை மீட்டுள்ளோம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தனிநபர்களுக்கு அதிகார மாற்றம் செய்யப்பட்டு, பத்திரப்பதிவு செய்வதற்கான முயற்சி நடைபெற்றது. தற்போது தவெக ஆட்சியில் கோயில் நிலத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள் என 19 பேர் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.கோயில் சொத்துகளாக இருந்தாலும், கோயிலுக்கு கொடுக்கப்பட்ட அறக்கட்டளை சொத்துகளாக இருந்தாலும் இந்து சமய அறநிலையத் துறையால் காப்பாற்றப்படும்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் கோயில் பணிகள் மற்றும் கோயில்களுக்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் குளங்கள் சீரமைப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும். ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினை தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை செய்து, உரிய முன்னெடுப்புகள் நிச்சயமாக எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் ஆட்சியர் பிரத்திக் தாயள், உபயதாரர் வி.எஸ்.ஜெயபால், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.