

கோப்புப் படம்
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் இன்று காத்திருப்பு போராட்டம் அறிவித்த நிலையில் நேற்று சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (டிச.16) தலைமைசெயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்தது.
இந்நிலையில் அச்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். இதில் சங்க நிர்வாகிகள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தினர். அப்போது அமைச்சர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், ஏற்கெனவே பணி வழங்கிய பணியாளர்கள் சம்பள பிடித்தம் செய்யக் கூடாது என மேலாண் இயக்குநரை அறிவுறுத்தினார்.
மேலும் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள பிரச்சினைகளை களைய சங்கங்களுடன் கலந்து பேச வேண்டும், பி.ஓ.எஸ். மிஷின் பரிவர்த்தனையில் இலக்கு நிர்ணயம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் குறித்து உள்துறை செயலர், நிதித்துறை செயலர் மற்றும் தலைமை செயலர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
மேலும் அனைத்து சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டு இறுதியில் ஒருமித்த கருத்து அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இன்று தலைமை செயலகத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றார்.
இந்நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஏற்கெனவே அறிவித்த போராட்டத்தை வாபஸ் பெறவில்லை என்றும் திட்டமிட்டப்படி பேரணியாகச் சென்று தலைமை செயலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இன்று பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டால் போராட்டம் கைவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.