“டெங்குவை மறைத்தவர்கள் பாடம் எடுக்க வருகிறார்கள்” - பழனிசாமிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி

அமைச்சர் அருண்ராஜ்

அமைச்சர் அருண்ராஜ்

Updated on
3 min read

சென்னை: “டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுகிறார். அவர்களது ஆட்சியில் டெங்குவை ‘மர்மக் காய்ச்சல்’ என்று மறைத்தவர்கள் இன்று டெங்கு குறித்து பாடம் எடுக்க வருகிறார்கள்” என தமிழக சுகாதார அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “மர்ம காய்ச்சல் என்று மறைத்தவர்கள், டெங்கு அரசு என்று பெயர் பெற்றவர்கள், இன்று டெங்கு குறித்து பாடம் எடுக்க வருகிறார்கள். தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் பற்றி பழனிசாமி அறிக்கை என்ற பெயரில் அவதூறுகளை அள்ளி இறைத்திருக்கிறார்.

மக்கள் நலனுக்காக அல்ல, கரைந்து வரும் தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்கவே இந்த அறிக்கை என்பதை அதன் ஒவ்வொரு வரியும் காட்டுகிறது.

புள்ளிவிவரம் யாருடையது? அவர் மேற்கோள் காட்டியிருக்கும் 17,348 டெங்கு பாதிப்பு, 4,653 உண்ணி காய்ச்சல், 71 பேருக்கு 21.09.2026 அன்று டெங்கு காய்ச்சல் ஆகிய எண்கள் அனைத்தும் இந்த அரசே அதிகாரப்பூர்வமாக, நாள்தோறும் வெளியிட்டு வரும் எண்கள். மறைக்காமல் வெளியிடுவதால்தான் அவரால் அவற்றை மேற்கோள் காட்டவே முடிகிறது.

ஆனால் இதே பழனிசாமியின் ஆட்சியில் டெங்கு பாதிப்பை டெங்கு என்று சொல்லக்கூடத் துணிவில்லாமல் "மர்ம காய்ச்சல்" என்று பெயர் சூட்டி மக்களின் உயிரோடு விளையாடினார்.

அதனால்தான் அவரது அப்போதைய அரசு ‘டெங்கு அரசு’ என்று மக்களால் அழைக்கப்பட்டது. அவர் முதல்வராக இருந்த 2017-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 23,294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 65 பேர் உயிரிழந்தார்கள் என்பது மத்திய அரசின் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையப் புள்ளிவிவரம். ஆரம்பக் கட்டத்திலேயே முடக்கிவிட்டோம் என்று அவர் இன்று கூறுவது வரலாற்றுக்குப் புறம்பான பொய். இதெல்லாம் அவருக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள்.

பரிசோதனை மையங்கள் 131 ஆக விரிவுபடுத்தப்பட்டு, இதுவரை 2.23 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் பாதிப்புகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகின்றன. அதனால்தான் உயிரிழப்பு விகிதம் 0.05% என்ற அளவில் கட்டுக்குள் உள்ளது. “நோயைக் கண்டறிவது குற்றமல்ல; மறைப்பதுதான் குற்றம்”. அந்தக் குற்றத்தைச் செய்தவர் யார் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும்.

அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு:

ஓர் இளம் உயிர் இழந்ததை அரசியல் ஆயுதமாக்க முயல்வது கீழ்த்தரமானது. அந்த மாணவருக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பு என்று 18.09.2026 அன்று அரசு கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் ஆய்வகத்தால் உறுதி செய்யப்பட்டது. உண்ணிக் காய்ச்சலுக்கான சிகிச்சை முறை டெங்குவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

எனவே அதற்கான தெளிவான, அறிவியல் பூர்வமான புரிதலை விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது மிக மிக அவசியம். துல்லியமாகக் கண்டறிந்து மக்களிடம் சொல்வதைத் "திசை திருப்பல்" என்கிறார், டெங்குவையே ஒப்புக்கொள்ளத் துணிவின்றி ஆட்சியை நடத்தியவர். ஒரு மருத்துவராக நான் சொல்கிறேன்: ஆய்வக அறிக்கையை அரசியல் அறிக்கையால் மாற்ற முடியாது.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் நடந்தது மாவட்ட அலுவலர்களுடனான தொழில்நுட்பக் கூட்டம். அது தினந்தோறும் நடைபெறும் கண்காணிப்பின் ஒரு பகுதி. முதல்வரின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்குச் செல்லும்போதும் அங்குள்ள மருத்துவமனைகளையும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்து வருகிறோம்.

04.08.2026 அன்று மாநில அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தோம்; கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வு மேற்கொண்டோம்.

பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியவுடன், 20.8.2026 அன்றே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. 26,303 கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் 58.5 லட்சம் வீடுகளில் வீடு வீடாகக் கொசு உற்பத்தி இடங்களை அழித்து வருகின்றனர். 5,677 புகை மருந்து இயந்திரங்கள் பாதிப்புள்ள பகுதிகளில் தொடர்ந்து இயங்குகின்றன. 17,187 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளுடன் தனி காய்ச்சல் வார்டுகள் செயல்படுகின்றன. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இரத்த வங்கிகளில் தட்டணு கையிருப்பு நாள்தோறும் கண்காணிக்கப்படுகிறது. டெங்கு சிகிச்சைக்கான தேசிய வழிகாட்டுதல்கள் குறித்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக வெற்றிக் கழக அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

பொது சுகாதாரத்தில் அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள். அவர் தமது அறிக்கையில் ‘செய்ய வேண்டும்’ என்று பட்டியலிட்டுள்ள ஒவ்வொன்றும் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி நடைபெற்று வருகிறது.

அவரது அறிக்கை, அரசின் நடவடிக்கைகளின் தாமதமான நகல் மட்டுமே. டெங்குவை கட்டுப்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இன்றியமையாதது. அதற்கான காணொளியும் நாம் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

பொதுமக்களுக்கு.... வீடுகளைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வையுங்கள். வாரம் ஒருமுறை உலர் நாள் கடைப்பிடியுங்கள். காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்ளாமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுங்கள். மருத்துவ உதவிக்கு 104 எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இறுதியாக, மக்கள் அளித்த மகத்தான ஆணையோடு அமைந்த அரசை டம்மி என்று சொல்லும் தகுதி, தேர்தலுக்குத் தேர்தல் மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு இல்லை.

மக்களின் ஆணையை அவமதிப்பது, மக்களையே அவமதிப்பதாகும். மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக இதுபோல் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் அரசியல் செய்ய முற்பட்டால் மக்களால் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிராகரிக்கப்படுவார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் அருண்ராஜ்</p></div>
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு: ஜி.கே.வாசன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in