ரூ.128 கோடியில் புதிய தாய்-சேய் நல கட்டிடங்கள்: அமைச்சர் அருண்ராஜ்

ரூ.128 கோடியில் புதிய தாய்-சேய் நல கட்டிடங்கள்: அமைச்சர் அருண்ராஜ்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ரூ.128 கோடியில் புதிய தாய் - சேய் நல கட்டிடங்கள் கட்டப்படும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:

மருத்துவ பணியாளர்கள் தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை என்ற நிலை எப்போதும் வராது. 1,090 மருந்தாளுநர்கள், 999 செவிலிய உதவியாளர், 896 கிராம சுகாதார செவிலியர், 164 சித்தா ஆயுர்வேதா யுனானி மருத்துவப் பணியாளர்கள், 130 கண் மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட 24 வகையான 3,594 பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 2026-27-ம் ஆண்டில் தகுதியான நபர்கள் வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முதியோர் காப்பீட்டு திட்டம்

தமிழகத்தில் முதல் முறையாக, 70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான உச்ச வரம்பு இன்றி, கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில் முதல்வரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

தாய்-சேய் நலச் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 4 அரசு மருத்துவமனைகளுக்கு புதிய தாய்-சேய் நலக் கட்டிடங்கள் ரூ.128 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். 31 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 6 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், முதல் நிலை செயற்கை கருத்தரிப்பு மையம் ரூ.14 கோடியில் மாநிலம் முழுவதும் நிறுவப்படும்.

தமிழ்நாடு மருத்துவ நகரம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில், நவீன மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கும் வகையில், மருத்துவக் கட்டமைப்புகளுக்கான வடிவமைப்பு திட்டம் ரூ.10 கோடியில் படிப்படியாக தயாரிக்கப்படும்.

நம் மாநிலத்தை உலக அளவில் மருத்துவத்துறையில் முதன்மை இடங்களில் ஒன்று என்ற இலக்கை அடைய, முதல் முறையாக ‘தமிழ்நாடு மருத்துவ நகரம்’ உருவாக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய முதற்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

2,500 செவிலியர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, தற்போது தொகுப்பூதியத்தில் உள்ள செவிலியர்கள் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

மகளிரின் மாதவிடாய் விலக்கு காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்க முதல்முறையாக ‘மாதவிடாய் விலக்கு ஆற்றுப்படுத்துதல் கொள்கை’ செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் முதன்முறையாக அரசு மருத்துவமனை களில், டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஆண்டு முழுவதும், இன்சுலின் மருந்துகள் ரூ.9.94 கோடியில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். மேற்கண்ட அறிவிப்புகள் உட்பட மொத்தம் 115 அறிவிப்புகளை சுகாதாரத் துறை அமைச்சர் நேற்று வெளியிட்டார்.

ரூ.128 கோடியில் புதிய தாய்-சேய் நல கட்டிடங்கள்: அமைச்சர் அருண்ராஜ்
போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு: அமைச்சர்கள் - உதயநிதி காரசார வாக்குவாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in