

அமைச்சர் விக்னேஷ்
சென்னை: டாஸ்மாக் கடைகள் மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக நுகர்வோர், பொதுமக்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் இதர பிரச்சினைகளை தெரிவிக்கும் வகையில், டாஸ்மாக் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் ஆக.31-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-889-2015 மற்றும் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் 73977 20230 ஆகியவற்றைத் தொடர்புகொண்டு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். மேலும், டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் மூலமும் புகார் தெரிவிக்கலாம்.
பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காணும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.