

சென்னை: களத்தில் தவெக அரசின் முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விவரித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தொகுதிகளை ஆய்வு செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு ஆகியவை முதல் பணியாக இருக்கும்.
வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுவாக மக்களுக்கு நன்றி சொல்லச் செல்வார்கள். ஆனால், அதற்கு முன்பாக தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தலைவர் விஜய் தெரிவித்தார். அதன்படி இன்று வில்லிவாக்கம் தொகுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
பூஜ்ஜிய ஊழல், பூஜ்ஜிய கமிஷனை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும். போதைப்பொருள் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க சொல்லியிருக்கிறோம்.
அரசு உத்தரவிட்ட நேரத்தில், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியுள்ளோம். காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா இயங்க வலியுறுத்தியுள்ளோம். காவல் நிலையத்தில் யார் புகார் கொடுத்தாலும் வீடியோ பதிவு செய்ய கூறியுள்ளோம்.
அரசின் நிலங்களை அளவிட உத்தரவிட்டிருக்கிறோம். உடனடியாக அரசு கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவற்றை திறக்க திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் ரிவ்யூ மீட்டிங் நடக்கும்.
தவெகவினர், குறிப்பாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் டெண்டர்களில் ஈடுபடக் கூடாது என முதல்வர் உறுதியாக கூறியுள்ளார். யாரையும் பரிந்துரைக்க கூடாது என சொல்லியிருக்கிறார்.
டெண்டர் எடுப்பவர்கள் உரிய நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என கூறியுள்ளோம். அறிவிக்கப்படாத மின்தடை உள்ளது. மின்தடை குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளோம்.
டாஸ்மாக் மூலம் 8 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எங்களுக்கு வருவாயை விட மக்களின் உயிர்தான் முக்கியம். அரசு ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும்.
அரசு ஊழியர்கள் அதிகமாக தவெகவுக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்வார்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.