மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை மனு அளிப்பு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை மனு அளிப்பு
Updated on
1 min read

சென்னை: புது டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை, தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்து, தமிழக நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவினை அளித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை இன்று (02.06.2026) புது டெல்லியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்து, தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான குறிப்புரை மற்றும் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.

அந்த மனுவில் உள்ள கோரிக்கைகள் விவரம்: 1. சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் சாலை பாதுகாப்புக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்துதல். தமிழ் நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் செயல்பாட்டிலுள்ள ரோந்து வாகனங்கள், அவசர கால ஊர்தி ஆகிய சேவைகளை அதிகரித்தல், விபத்து சிகிச்சை மருத்துவமனைகளை நெடுஞ்சாலை ஓரங்களில் அமைத்தல், பாதுகாப்பான யூ-திருப்ப அமைப்பு ஏற்படுத்துதல் ஆகியவற்றை தமிழ் நாட்டில் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் சாலை விபத்துகள் 71,313 மற்றும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட 18,421 உயிரிழப்புகள் குறித்து ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்க விடுத்துள்ளார்.

2. தமிழ்நாட்டில் சுமார் 1500 கி.மீ. நான்கு வழிச்சாலைகளை ஆறு வழிச்சாலைகளாக மேம்படுத்துதல். தொடர்ந்து நிலவும் அதிக போக்குவரத்து நெரிசல், சரக்குப் போக்குவரத்து வளர்ச்சி, தொழில்துறை விரிவாக்கம், நகரமயமாக்கலால் உருவாகும் அழுத்தங்கள் மற்றும் தென்னிந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இவ்வழித்தடங்கள் வகிக்கும் முக்கிய பங்கு ஆகியவற்றின் அடிப்படையில், மாநிலத்திலுள்ள தகுதியான தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் சுமார் 1,500 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆறு வழிச்சாலை மேம்பாட்டை உள்ளடக்கிய சிறப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்திட ஒப்புதல் வழங்குமாறு கோரிக்க விடுத்துள்ளார்.

3. செங்கல்பட்டு – திண்டிவனம் (NH-32) பகுதியை 6 / 8 வழிச்சாலையாக விரிவாக்குதல்

4. கோயம்புத்தூர் புறவழிச்சாலை (நீலாம்பூர்–மதுக்கரை, NH-544) 6 வழிச்சாலையாக மேம்படுத்துதல்

5. திருச்சி (பஞ்சப்பூர்) – ஜீயபுரம் – கரூர் (NH-81) 6 வழிச்சாலையாக மேம்படுத்துதல்

6. கரூர் – கோயம்புத்தூர் (NH-81) பகுதியை சேவைச் சாலையுடன் அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட 6 வழிச்சாலையாக அமைத்தல்

7. மாதவரம் – சோழவரம் (NH-16) உயர்மட்டச் சாலை

8. மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர் (NH-48) உயர்மட்டச் சாலை

9. உப்பிலிபாளையம் மேம்பால சுற்றுச்சாலையை அகலப்படுத்துதல்.

10. 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய சாலை மற்றும் உட்கட்டமைப்பு நிதி பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல். ஆகிய கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்திட வலியுறுத்தப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை மனு அளிப்பு
மகாராஷ்டிராவில் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in