

சென்னை: செம்மஞ்சேரி விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அப்போது நடைபெற்ற விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: தமிழகத்தில் உலகத் தரத்தில் விளையாட்டு கட்டமைப்பை உருவாக்குவதற்காக செம்மஞ்சேரியில் 128 ஏக்கரில் ரூ.261 கோடியில் சர்வதேச அளவிலான விளையாட்டு நகரத்தை அமைக்க முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிட்டு பணிகளைத் தொடங்கினோம். அந்த திட்டத்தை ரத்து செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏன் இந்த திட்டத்தை அரசு கைவிடுகிறது?
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் வாங்கியது கிடையாது. 38 மாவட்டங்களுக்கும் பெண், ஆண் விடுதிகள் உருவாக்க உள்ளோம். செம்மஞ்சேரியில் உள்ள விளையாட்டு நகரத்தை முழுமையாக ரத்து செய்யவில்லை.
மறுகட்டமைப்பு செய்யவுள்ளோம். அந்த இடம் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அதற்கு தனித்திட்டமுள்ளது. விளையாட்டு நகரத்தை ஒலிம்பிக் தரத்தில் உருவாக்க வேண்டும். அதற்காக 46 விளையாட்டுகளை கொண்ட விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்துவருகிறோம்.
கடந்த ஆட்சியாளர்கள் தேர்தல் வாக்குறுதியில் இதை சொல்லி, அதற்கான டெண்டர் கோரியது கடந்த ஜனவரியில்தான். 5 ஆண்டுகள் எதுவும் செய்யவில்லை. முதல்வர் அனுமதி கொடுத்ததும் 6 மாதங்களில் அதற்கான பணிகளை தொடங்குவோம்.
எதிர்க்கட்சி தலைவர்: 128 ஏக்கர் சென்னைக்கு அருகில் உடனே கிடைக்காது. 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. விரிவான திட்ட அறிக்கை தயாரித்தோம். சிஎம்டிஏ சார்பில் சிறப்பு ஆலோசகர் நியமிக்கப்பட்டு, அவர்கள் பரிந்துரையில் இந்த செம்மஞ்சேரி இடம் தேர்வானது.
இந்த நகரத்தை 3 கட்டங்களாக உருவாக்க முடிவானது. முதல்கட்ட பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதல்முறையாக பிஎம்எக்ஸ் சைக்கிள் ஓடுதளப்பாதை, மிகப்பெரிய நீர் விளையாட்டு வசதிகள் என 25 விளையாட்டுகளுக்கு தேவையான 30-க்கும் மேற்பட்ட கட்டமைப்பு வசதிகள் அங்குவர இருந்தன. தற்போது அமைச்சர் இந்த திட்டத்தை கைவிடவில்லை. அதை மறுகட்டமைப்பு செய்யவுள்ளதாக கூறியிருக்கிறார். அதை சீக்கிரம் செய்துதர வேண்டும்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: உறுதியாக இந்த அரசு உலக தரத்திலான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும். 1994-ல் ஜெயலலிதாவுக்கு பிறகு சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம் உருவாக்கப்படவில்லை. இந்த 5 ஆண்டுகளில் முழுப் பணிகளும் முடிந்து, விளையாட்டு நகரம் திறக்கப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர்: அமைச்சர் பல ஆண்டுகளாக விளையாட்டு கட்டமைப்பு இல்லை என்கிறார். பல ஆண்டுகளாக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன் தான். அவரிடம் அந்த தகவலை கேட்டு பெற்றுக்கொள்ளவும். இவ்வாறு விவாதம் நடந்தது.