

சென்னை: ஈரானிய கடல் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசுகையில், “மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசல் ஊராட்சி, கொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித்து வந்தனர். அப்போது ஈரான் கடல் கொள்ளையர்கள் தாக்குதலில் மாவீரன் என்ற மீனவர் அதே இடத்தில் உயிரிழந்தார். பால்ராஜ், சங்கர், மணிகண்டன் ஆகிய 3 பேர் படுகாயத்துடன் சவுதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை காசிமேட்டில் இருந்து சென்ற தமிழக மீனவர்கள் ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, கடந்த 17-ம் தேதி, ஆந்திர அதிகாரிகள் 8 விசைப் படகுகளை பறிமுதல் செய்து, அவற்றில் இருந்த மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்விரு நிகழ்வுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த பதிலில், “சவுதி அரேபியாவில் தமிழக மீனவர்கள் 4 பேர் மீது கடந்த ஆக.10-ம் தேதி, ஈரானிய கடல் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மீனவர் மாவீரன் உயிரிழந்தார். காயமடைந்த சங்கர் ஆபத்தான நிலையில் சவுதி அரேபியா ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறு காயமடைந்த பால்ராஜ், மணிகண்டன் ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டதாக தகவல் வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவரது உடலை தமிழகம் கொண்டுவரவும், காயமடைந்தவர்களை அழைத்து வரவும் தேவையான நடவடிக்கைகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழக அரசின் மீன்வளத் துறை செயலாளர், வெளியுறவுத் துறை மூலம் தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்” என்றார்.
தொடர்ந்து மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் பேசுகையில், “கடந்த ஜூலை 2-ம் தேதி நிதித்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள் தலைமையில் படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் உடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை மண்டல மீன்வள இணை இயக்குநர், உதவி இயக்குநர் மற்றும் படகு உரிமையாளர்களுடன் ஆந்திர மாநில மீன்வளத்துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜூலை 11-ம் தேதி இரு மாநிலங்களுக்கு இடையேயான குழு கூட்டத்தில் சிறை பிடிக்கப்பட்ட சென்னை படகுகள், மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தப்பட்டது. ஆந்திர மாநில மீன்வளத்துறை ஆணையர், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நெல்லூர் ஆட்சியரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழகம் - ஆந்திரா இடையே மீனவர்கள் சுமுகமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.