

ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் காவிரி நீர்.
மேட்டூர்/தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி அணைநிரம்பியது. இதையடுத்து, அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று காலை விநாடிக்கு 19,119 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, மாலையில் 19,264 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அணைக்கு வரும் நீரின் அளவு, அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 76.18 அடியாகவும், நீர் இருப்பு 38.25 டிஎம்சியாகவும் உள்ளது.
இதற்கிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம்காலை விநாடிக்கு 20 ஆயிரம்கனஅடியாக பதிவான நீ்ர்வரத்து, நேற்று காலை 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. எனினும், அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத்துக்கான தடை மூன்றாவது நாளாக நீடித்தது. தொடக்கத்தில் செந்நிறத்தில் கலங்கலாக வந்த காவிரி நீர்,தற்போது சற்று தெளிவடைந்து வேகமாக பாய்ந்து வருகிறது.