தேனியில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னையில் ரூ.5 கோடியில் தலைவர்களின் ஒருங்கிணைந்த கோட்டம்
தேனியில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், புதிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசியதாவது: வேலுநாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோரை சிறப்பிக்கும் விதமாக நூலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கோட்டம் சென்னையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இயக்குநர் பாரதிராஜாவின் கலைச் சாதனைகளைப் போற்றும் வகையில், அவரது சொந்த ஊரான தேனியில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.2.50 கோடியில் நிறுவப்படும்.

சென்னை தரமணி தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், ரூ.9.25 கோடியில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, நவீன செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்கப்படும்.

படப்பிடிப்புக்கான அனுமதி, தடையின்மைச் சான்றுகள், நலவாரிய விண்ணப்பங்கள் மற்றும் வள்ளுவர் கோட்டம், கலைவாணர் அரங்கம் உள்ளிட்டவற்றின் முன்பதிவுகளை எளிதாகப்பெற ஒற்றைச் சாளர இணைய தள வசதி ஏற்படுத்தப்படும்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு கூடுதல் நிதியாக ரூ.5.75 கோடி தொடர் செலவினமாக வழங்கப்படும்.

இணையம்,மின்னணுத் தளங்களில் தமிழ்மொழியை ஆக்கப்பூர்வமாக வளர்க்கும் 2 அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் ‘இணைய தமிழ்ச்செம்மல்’ விருது வழங்கப்படும்.

தமிழக எல்லை போராட்டக் காவலர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.7,500-லிருந்து ரூ.10,000-ஆக உயர்த்தப்படும். சென்னை அரசு மைய அச்சகத்தில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய காகிதக் கிடங்கு மற்றும் பொதுப் பண்டக சாலை ரூ.7.3 கோடி செலவில் கட்டப்படும் என்பன உள்ளிட்ட 23 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

தேனியில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன்: உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in