

டி.கே.சிவகுமாருடன் தீவிர ஆலோசனையில் விஜய்.
சென்னை: “மேகேதாட்டு அணை கட்டுவது கர்நாடகாவுக்காக அல்ல; தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பயன்பாட்டுக்காகவே கட்டப்படவுள்ளது” என கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை அடுத்த கோவளத்தில் நேற்று நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவீதத்துக்கும் அதிகமாக தென்மாநிலங்கள் பங்களிக்கின்றன. இதில் கர்நாடகா, நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் 42 சதவீதத்தையும், விமானத் துறையில் 60 சதவீதத்தையும் அளிக்கிறது.
இருப்பினும், 15-வது நிதியமைப்பில் கர்நாடகாவுக்கான நிதிப் பகிர்வு 4.7 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டதால், ரூ. 65ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு அதிகப் பங்களிக்கும் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது; தற்போதைய இடங்களின் எண்ணிக்கையிலேயே உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளில், 1971-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றும் தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில் தமிழகம், கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. மேகேதாட்டு திட்டத்தைப் பொறுத்தவரை குடிநீருக்காகப் பயன்படுத்தப்படும் 5 டி.எம்.சி நீரைத் தவிர, அணையில் தேக்கப்படும் மற்ற அனைத்து நீரும் தமிழகத்துக்கே சென்றடையும்.
மேகேதாட்டு அணை கட்டுவது கர்நாடகாவுக்காக அல்ல; தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பயன்பாட்டுக்காகவே கட்டப்பட உள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரங்கள் தொடர்பாகத் தனியாகக் கூட்டம் கூட்டி, சுமுகமான முறையில் தீர்வுகாண ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.