

அகஸ்தியமலை மற்றும் மேகமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் வன உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் கோரிக்கைகளைச் சரிபார்ப்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் சிறப்புக்குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேகமலை வனப்பகுதி கடந்த 2009-ஆம் ஆண்டு வன உயிரின சரணாலயமாக தமிழக அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அப்பகுதியில் விவசாயம் செய்து வந்த மக்கள், குடியிருந்த மக்களை வனத்திலிருது வெளியேறும்படி வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், நான்கு தலைமுறைகளுக்கு மேலாக விவசாயம் செய்து வாழ்ந்துவருபவர்களையும், பரம்பரையாக தங்கியிருப்பவர்களையும் வெளியேற்றும் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது
இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து வந்தது. குறிப்பாக வனப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மறுவாழ்வு வழங்குவது மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வழி காட்டுதல்களை வழங்கியிருந்தது.
இதனையடுத்து, தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் சமூக நீதித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்களையும், மத்திய அதிகாரக் குழுவின் அறிக்கைகளையும் விரிவாக ஆராய்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தீப் மேத்தா பிறப்பித்த உத்தரவு: மேகமலை வனப்பகுதியில் இலவம் பஞ்சு சாகுபடி செய்யப்படுவது குறித்த அரசின் வாதம் நிராகரிக்கப்படுகிறது. திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் வணிகப் பயிர்களின் சாகுபடி இயற்கையாக விளையும் சிறு வன விளைபொருட்களின் வரம்புக்குள் வராது.
வனப் பகுதிக்குள் தற்காலிகக் குடியிருப்புடன் விவசாயம் செய்பவர்கள் மற்றும் வன எல்லைக்கு வெளியே வசித்துக்கொண்டு விவசாயம் செய்பவர்கள் ஆகிய இரு பிரிவினரும் வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிவாரணம் பெற தகுதியற்றவர்கள், அவர்கள் பரிசீலனையிலிருந்து விலக்கப்பட வேண்டும் அதேவேளையில் வன உரிமைச் சட்டம், 2006-ன் பிரிவு 2ன் படி, வனப்பகுதிகளில் பாரம்பரியமாக வசிக்கும் பழங்குடியினர் அல்லது இதர பாரம்பரிய வனவாசிகள் மட்டுமே வனப் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள்.
அதுபோல, வன உரிமைச் சட்டம் தொடர்பான கோரிக்கைகளைச் சரிபார்க்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படுவதாகவும், இக்குழுவானது மேகமலை பகுதியில் உள்ள நபர்களில் பழங்குடியினர் யார்? பழங்குடியினர் அல்லாதவர் யார் என்ற விவரங்களையும் ஆய்வு மேற்கொள்ளும்.
இக்குழுவிற்கு மத்திய அதிகாரக் குழு மற்றும் தமிழக அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஆகியோர் உதவி செய்ய வேண்டும். இந்தக் குழு வழங்கும் பரிசீலனைகளை சரிபார்த்து அதை சீலிட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை பிப். 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.