

சுதா எம்.பி | கோப்புப் படம்
கும்பகோணம்: தவெக தலைவர் விஜய் உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கேட்பது காங்கிரஸ் எம்.பி.க்கள், தொண்டர்களின் ஜனநாயக உரிமை என மயிலாடுதுறை எம்.பி. சுதா தெரிவித்தார்.
கும்பகோணத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கும்பகோணத்தில் 2028-ம் ஆண்டு மகாமகப் பெருவிழா நடைபெறுவதையொட்டி, ரயில்வே துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளேன்.
தஞ்சாவூர்- விழுப்புரம் இடையே இரட்டைப் பாதை அமைக்க மத்திய ரயில்வே சர்வே குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், ரயில்வே வாரியம் விரைவில் ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்யும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் 'பட்ஜெட் ஓட்டல்கள்', அனைத்து நடைமேடைகளிலும் நகரும் படிக்கட்டுகள், லிஃப்ட், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும். கும்பகோணத்தில் இருக்கும் குட்ஷெட் திருநாகேஸ்வரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பயணிகளுக்காக 2-வது நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது.
மகாமகப் பெருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் முதன்முதலில் குரல் கொடுத்துள்ளேன். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள்தான் எங்களின் பொது எதிரி. தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள், தொண்டர்கள் கருத்து தெரிவிப்பது ஜனநாயக உரிமை. ஆனால், சூழ்நிலைக்கு ஏற்ப நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு மூத்த தலைவர் ராகுல் காந்தி சரியான முடிவை எடுப்பார்.
காங்கிரஸ் கட்சி குறித்து தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் விரக்தியில் பேசியதாகவே தெரிகிறது. காங்கிரஸ் கட்சி மக்களின் நலனுக்காகவும், கூட்டணி தர்மத்துக்காகவுமே இருக்கும்” என்று அவர் கூறினார்.