மயிலாடுதுறை ஐப்பசி துலா உற்சவம்: காவிரியில் தினமும் 500 கனஅடி தண்ணீர் திறக்கக் கோரி வழக்கு

உயர் நீதிமன்றத்தில் பாஜக சார்பில் பொதுநல மனு
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: மயிலாடுதுறை ஐப்பசி துலா உற்சவத்துக்காக காவிரியில் தினமும் 500 கனஅடி நீர் திறக்கக் கோரி பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த வழக்கறிஞரும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான கே.ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி துலா உற்சவத்துக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் முக்கிய தீர்த்தவாரி நாட்களில் துலாக்கட்டத்தில் போதிய தண்ணீர் இல்லாததால், ஆழ்துளைக் கிணற்று நீரையும், கடைசி நேரத்தில் கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட நீரையும் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நடப்பாண்டு ஐப்பசி துலா உற்சவம் நவம்பர் 6-ம் தேதி தொடங்கிய நிலையில், நவம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ள கடைமுகத் தீர்த்தவாரியையொட்டி கல்லணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் துலாக்கட்டத்தில் போதிய நீர் இல்லை.

இதனால் தருமபுரம் ஆதீனகர்த்தரே காவிரியில் நீராட முடியாமல், பாத்திரத்தில் கொண்டுவரப்பட்ட தண்ணீரில் சடங்குகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போதைய விழாக் காலத்தில் நவம்பர் 17-ம் தேதி வரை தினமும் சுமார் 500 கனஅடி நீரைத் திறந்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பாதிக்காத வகையில் நீர் திறப்பைத் தொழில்நுட்ப ரீதியாகத் திட்டமிடவும் உத்தரவிட வேண்டும்’ என்று மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நீர்வளத் துறை, வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறை, ஆதீனங்கள் உள்ளிட்டோர் அடங்கிய நிரந்தரக் குழுவை அமைத்து, ஒவ்வோர் ஆண்டும் விழாவுக்கு முன்னதாக நீர் மேலாண்மைத் திட்டத்தை வகுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர். ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எஸ். மதுசூதனன், எம்.வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கை வைத்த நிலையில், நாளை (நவ.13) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“கடும் குற்றச்சாட்டுக்கு ஆளான தவெக எம்எல்ஏக்களுக்கு தீபாவளி பரிசா?” - முதல்வர் விஜய் மீது தினகரன் சாடல்

X