

இடது:பெ.மணியரசன் | வலது: பி.ஆர்.பாண்டியன்
விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அநீதியானது என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக பெட்ரோலிய கிணறுகள் தோண்டக்கூடாது, மீத்தேன் எடுக் க க் கூடாது. காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று இயற்கை வேளாண்மை அறிஞர் கோ.நம்மாழ்வார் போராடினார்.
அதன் தொடர்ச்சியாக 2015-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம் கிராமத்தில் புதிதாக தோண்டப்பட்ட பெட்ரோலிய கிணற்றை எதிர்த்து போராட்டம் நடத்திய தற்காக தமிழக காவிரி விவசாயி கள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், விக்கிரபாண்டியம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வராஜ் ஆகியோருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியிருப்பது அநீதியாகும்.
இதுபோன்ற பொது நலன் தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகள் இன்றும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
விக்கிரபாண்டியம் சம்பவத்தில் எந்தெந்த தண்டனை பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோ. அதே பிரிவுகளின் கீழ் பல்வேறு அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் மட்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிச்சம் மீதியாக இருப்பது நீதித் துறை தன்னாட்சி தான். அதற்கும் ஆபத்து வரக்கூடாது. எனவே இதுகுறித்து சட்டத்துறை வல்லுநர்கள், வழக்கறிஞர்கள்; மனித உரிமைச் சிந்தனையாளர்கள் விவாதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.