

சென்னை: அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், “எங்களுக்கும் திருப்பி பேச தெரியும்” என திமுகவுக்கு விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமைச்சர் பதவியும் அதிகாரமும் போன பிறகு, விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலரின் மொழியின் தரம் எந்த அளவுக்கு கீழே விழுகிறது என்பதற்கான உதாரணம் தான் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு. நாங்கள் உங்களை அதிகாரத்துக்கு கொண்டு வர உழைத்தவர்கள்தான். எங்களுக்கும் திருப்பி பேச தெரியும்.
அரசியலிலும் பதிலடி கொடுக்க தெரியும். ஆனால், இன்னும் அரசியல் நாகரிகத்தை மதித்து திமுக தலைமையின் பதிலுக்கு காத்திருக்கிறோம். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும், எங்கள் மூத்த தலைவர்களையும் தொடர்ந்து தரக்குறைவாக பேசும் இந்த அரசியலை திமுக தலைமையே ஊக்குவிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
திமுக தலைமை இதை ஆதரிக்கிறதா? இல்லையெனில் உடனடியாக கண்டிக்க வேண்டும். இல்லை என்றால், இதே அரசியல் மொழியில் உங்களுக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயங்க மாட்டோம். அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம்.
ஆனால் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எதிர்க்கட்சியினர் மீது இழிவான வார்த்தைகள் பயன்படுத்துவது அரசியல் கலாச்சாரம் அல்ல. அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி. அனிதா ராதாகிருஷ்ணன் தனது வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக தலைமையும் இதை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.