

மதுரையை மையமாக வைத்து தமிழகத்தில் மத அரசியலை தூண்ட ஆர்எஸ்எஸ், பாஜக சதிசெய்வதாக காங்கிரஸ் எம்பி-யான மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குளிர்காலக் கூட்டத் தொடரில் 2 கருப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பெயரை மாற்றும் சட்டத் திருத்தத்தை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் போராட்டத்தை அரசு நிராகரித்து, திட்டத்தை முடித்து வைத்துள்ளது.
ஆர்எஸ்எஸ் சிந்தனையுடன் செயல்படும் மோடி அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க வேண்டும் என 11 ஆண்டுகளாக முயற்சி செய்து, இன்று சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவுடன் செய்து காட்டியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்க வேண்டியது. இத்திட்டத்தில் தமிழகத்தில் 96 லட்சம் பேர் பயன்பெற்று வந்த நிலையில், சட்டத்திருத்தம் மூலம் 4 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழருவி மணியன் மறைமுகமாக பாஜக. ஆர்ஆர்எஸ்ஸுக்கு வேலை பார்ப்பவர். தற்போது ஜி.கே.வாசனுடன் சேர்ந்து உள்ளார். அவர் சேர்ந்த இடம் வெற்றிபெற்றது இல்லை. அவரது பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாட்டில் ஆன்மிகம் எப்போதும் உள்ளது. மதுரையை மையமாகக் கொண்டு தமிழகத்தில் மதவெறி அரசியலைத் தூண்ட பாஜக, ஆர்எஸ்எஸ் சதி செய்கிறது. இதை வீழ்த்த வேண்டியது தமிழர்களின் கடமை.
இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க வாக்குச்சாவடி முகவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது நியாயமானது. எனது வாக்குச் சாவடியில் 2 வாக்காளரின் பெயர்கள் இந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளின் வாக்குகளை நீக்குவதுதான் இவர்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.