

சென்னை: குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென்னக மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்றும், அரைகுறைத் தகவல்களைப் பரப்பி அற்ப அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எதிர்வினையாற்றியுள்ளார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப் பதிவில், “தயாநிதி மாறன் உண்மை என்னவென்று தெரியாமல் அல்லது தெரிந்தே திரித்துப் பேசுவது அரசியல் தர்மம் அல்ல. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்வைத்தது பாஜகவின் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை அல்ல.
‘வளர்ச்சி அடைந்த, குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது’ என்பதற்காக மாநிலத்தின் பொருளாதாரப் பங்களிப்பு (GSDP) மற்றும் வளர்ச்சியையும் 50:50 கணக்கில் கொள்ள வேண்டும் என்ற ‘ஹைபிரிட் மாடலைத்தான் வலியுறுத்தினார். இது தென்னிந்திய மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக்கும் குரல்.
ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் வஞ்சித்து, வட மாநிலங்களுக்குச் சாதகமாக பாஜக கொண்டுவரத் துடிக்கும் மக்கள்தொகை அடிப்படையிலான ஒருதலைப்பட்ச தொகுதி மறுவரையறையைத் தான் நாங்கள் தென்னிந்தியாவுக்கு இழைக்கப்படும் துரோகம் என்று எதிர்க்கிறோம்.
தெலங்கானாவாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்திய தென்னக மாநிலங்கள் ஒருபோதும் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.
அரசியல் லாபத்திற்காக அரைகுறைத் தகவல்களைப் பரப்பி அற்ப அரசியல் (Petty Politics) செய்வதை விட்டுவிட்டு, தென்னக மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், தமிழகத்தின் குரலாகவும் ஒட்டுமொத்தமாக இணைந்து பாஜகவின் சதியை வீழ்த்த வரமாட்டேன் என்று முடிவெடுத்து விட்டீர்களா?” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ‘தமிழகத்தில் மட்டும் தொகுதி மறுவரையறை வேண்டாம் என்ற நாடகம் ஏன்? அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் இப்படியான எம்.பி.க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை?’ என திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.