“கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது” - மாணிக்கம் தாகூர்

Congress MP Manickam Tagore

எம்.பி மாணிக்கம் தாகூர்

Updated on
1 min read

சென்னை: கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் தேர்தல் களத்தில் விஜய்யின் தவெக புதிதாக இணைந்துள்ளாலும் கூட, அதற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு காரணமாக அவரது இருப்பு திமுக, அதிமுக கூட்டணிக்கு சவாலாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரலாம் என்று நிபந்தனையை மட்டுமே தவெக வைத்துள்ளது. இங்கும், அங்கும் போய்ப் பார்த்துவிட்ட கட்சிகள் தவெகவில் கடைசி நேரத்தில் கூட ஐக்கியமாகலாம் என்ற கணிப்புகளும் நிலவுகின்றன.

இந்தச் சூழலில், பல மாதங்களாகவே திமுக கூட்டணியில் சலசலப்பு நிலவுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இன்று தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவு ஒன்றை பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.

ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.

இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.

ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.

அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே ! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, விசிக தலைவர் திருமாவளவன் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று பதிவிட்ட ட்வீட் ஒன்று மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. அதைவைத்து அரசியல் பகடைக் காய்கள் உருட்டப்பட அதற்கு திருமாவளவனே முற்றுப்புள்ளியும் வைத்தார்.

‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பது விசிகவின் கொள்கை. ஆனால், இப்போதைய பல்வேறு சூழல்களைப் பொருத்திப் பார்க்கையில் திமுக கூட்டணியில் விசிக இணக்கமாக இருக்கிறது என்றார்.

இந்நிலையில், இப்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து அத்தகைய குரல் ஒன்று எழுந்துள்ளது. ஆளும் திமுக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ள நிலையில், “கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது” என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளது கவனம் பெறுகிறது.

Congress MP Manickam Tagore
விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி... வீதிகளில் திரண்ட மக்கள் - ஈரானில் நடப்பது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in