

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியாவின் கல்வி முறையில் நிலவும் சுரண்டல்கள், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
நீட் தேர்வு பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமானது. கடந்த 2016-க்கு முன்பு, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைக்கான தகுதி தீர்மானிக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வு வந்த பிறகு, கிராமப்புறமாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகி தமிழகத்தில் இதுவரை 37 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஒருபுறம் தகுதி, மெரிட் என்று கூறிவிட்டு, மறுபுறம் மருத்துவமேல்படிப்புக்கு பூஜ்ஜியம் எடுத்தால் போதும் என்று தளர்த்துவது ஏன். நீட் தேர்வுக்கான பயிற்சி கட்டணம் கடந்த 2016-ல்ரூ.18,000 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை உயர்ந்துள்ளது.
நீட் தேர்வு மூலம் தனியார் பயி்ற்சி மையங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன. இது முழுக்க முழுக்க வணிகமயமாக்கல். கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்துக்கு மட்டுமானதாக இருக்கக் கூடாது. கிராமம், நகரம் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் மக்கள் போராட்டங்களை ஊடகங்கள் பெரிய அளவில் காட்டுவது இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸ் கட்சி மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து,ராகுல் காந்தி பிரதமரான பிறகு, கல்வித் துறையில் நிலவும் இந்த அநீதிகளுக்கு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.