“ஊழலால் தோற்கடிக்கப்பட்ட கட்சிதான் திமுக” - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

“ஊழலால் தோற்கடிக்கப்பட்ட கட்சிதான் திமுக” - மாணிக்கம் தாகூர் விமர்சனம்
Updated on: 
1 min read

விருதுநகர்: “ஊழலால் தோற்கடிக்கப்பட்ட கட்சிதான் திமுக” என்று நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் தலைவருமான மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

விருதுநகரில் இன்று செய்தியாளர்களிடம் லியோனியின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்துப் பேசிய அவர், “கருணாநிதி இருந்தவரை ராமரை திமுக ஏற்றுக் கொண்டதில்லை. ராவணனையே தமிழர்களின் அடையாளமாகக் கருதினர். லியோனி ஒன்று புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று ராமர் ஆள வேண்டும் அல்லது அவரது பாதுகை ஆள வேண்டும் என்பதுதான் வரலாறு. திமுகவை மக்கள் தோற்கடிக்க ஊழல், அட்டூழியம் மற்றும் ஆணவம் ஆகியவையே காரணம். லியோனி போன்றவர்கள் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஒழுங்காகப் படிக்க வேண்டும்.

தவெக மீது திமுக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்புவது மிகவும் புதிதாக இருக்கிறது. எல்லா விஷயத்துக்கும் நீதிமன்றம் செல்லும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, ஊழல் நடக்கிறது என்று தெரிந்தால் உடனடியாக ஏன் நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை?

முந்தைய ஆட்சியில் இருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் செய்த தவறுகளில் இருந்து எந்த விதத்திலும் தப்பிக்கக் கூடாது. அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும். ஊழலுக்குப் பெருமளவில் காரணமாக இருந்த இவர்கள் கண்டிப்பாகப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வது நல்லதல்ல. இது இன்று புதிதாக உருவானது அல்ல, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்ட 'சிங்கப் படை' அமைப்பை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஏளனமாகப் பேசியுள்ளார்.

பெண்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு படையை அவர் இவ்வளவு தரக்குறைவாகப் பேசுவார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்ல.

அரசியல்வாதிகளை காவல் துறை நடத்தும் விதம் முந்தைய ஆட்சியில் இருந்து தொடர்வதுதான். அது இன்றா அவருக்குத் தெரிய வருகிறது?

தமிழகத்தில் குற்றங்களே நடைபெறாது என்று கூற முடியாது. ஆனால் இந்திய அளவில் குற்றங்கள் குறையும் மாநிலமாகத் தமிழகம் விளங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியில் நடந்த அவலங்களாலும், ஆணவம் மற்றும் ஊழலாலும் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்.

இந்த ஆட்சியைக் கவிழ்க்க கடந்த 4 மாதங்களாகச் சதிகள் நடைபெற்று வருகின்றன. அவர் மீண்டும் முதல்வராக முடியாமல் போனது போல, இந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியும் ஒரு பகற்கனவாகவே மாறும். அவர்களின் சதித் திட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்படும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி திட்டமிட்டபடி டெல்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கண்டிப்பாகக் கலந்துகொள்ளாது” என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.

“ஊழலால் தோற்கடிக்கப்பட்ட கட்சிதான் திமுக” - மாணிக்கம் தாகூர் விமர்சனம்
போராட்டங்கள் மூலம் ஆட்சியைப் பிடிக்க ராகுல் காந்தி கனவு காண்கிறார்: புதுச்சேரி பாஜக விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in