

மாணிக்கம் தாகூர்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டிருக்கிறார். செல்வப்பெருந்தகை மாற்றம் தேர்தல் முடிந்தவுடனேயே நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அவர் மாற்றப்பட்டு மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறப்பித்துள்ளதாக காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூரின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று மதியம் ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவராக சஞ்சய் தத், உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக ராஜேந்திர பால் மற்றும் ஒடிசா காங்கிரஸ் தலைவராக லால்ஜி தேசாய் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
விருதுநகர் எம்.பி.யான மாணிக்கம் தாகூர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வெகு நாட்களுக்கு முன்னதாக ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டை முன்னெடுத்து காங்கிரஸ் - திமுக கூட்டணியில் விரிசல் என்ற பேச்சுக்கு வழிவகுத்தார்.
தொடர்ந்து திமுகவை பல்வேறு தருணங்களிலும் விமர்சித்து வந்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கக் கூடாது என்பதையும் மறைமுகமாக வலியுறுத்தி வந்தார். அவரது கருத்துகளால் எக்ஸ் தளத்தில் திமுக - காங்கிரஸ் கட்சியினரிடையே பெரிய அளவில் வார்த்தைப் போர் நடந்தது நினைவுகூரத்தக்கது.
இந்தச் சூழலில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாற்றப்படுவார் என்றே கூறப்பட்டது. செல்வப்பெருந்தகையும் அந்தக் கருத்துகளை மறுக்கவில்லை. தலைமைப் பதவியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலகத் தயாராக இருப்பதாகவே கூறினார்.
செல்வப்பெருந்தகையும் அந்தக் கருத்துகளை மறுக்கவில்லை. தலைமைப் பதவியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலகத் தயாராக இருப்பதாகவே கூறினார்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மாணிக்கம் தாகூர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் அணுக்கமாகச் செல்லக் கூடியவர் என்றும் கூறப்படுகிறது.
2009, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.