

சென்னை: கோயில்களில் கும்பாபிஷேகத்தின்போது சாற்றப்படும் அஷ்டபந்தன மருந்தில் 8 மூலப்பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தது 12 ஆண்டுகள் வரை சிலைகளை நிலைநிறுத்தும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் டி.ஜி.வினய் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேகத்தின்போது அஷ்டபந்தன மருந்து சாற்றப்படுகிறது. கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, வெண்ணெய் ஆகிய 8 மூலப்பொருட்கள் கொண்ட கலவையாக இந்த மருந்து இருக்க வேண்டும். குறைந்தது 12 ஆண்டுகள் வரை சிலைகளை நிலைநிறுத்தும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
சேதமடைந்த அல்லது பின்னமான சிலைகளை அகற்றிவிட்டு புதிய சிலைகளை நிறுவுவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். அகற்றப்பட்ட பழைய சிலைகளை கோயில் வளாகத்திலேயே பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
புதிய சிலைகளை நிறுவும்போது, பீடத்தில் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் நவரத்தினங்கள் பற்றிய விவரங்களை உரிய பதிவேட்டில் பதிவு செய்து, பீடத்தில் மீண்டும் வைக்க வேண்டும். மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர், சரிபார்ப்பு அலுவலர் முன்னிலையில் அஷ்டபந்தன மருந்து சாற்றும் பணிகள் நடைபெற வேண்டும்.
இப்பணிகள் தொடங்குவது முதல் நிறைவடைவது வரை முழுமையாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை சட்ட விதிகளுக்கும், ஆகம நெறிமுறைகளுக்கும் உட்பட்டு இந்த நிகழ்வு நடைபெற வேண்டும்.
உபயதாரர் செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அவர்களது சம்மதக் கடிதம் இணைக்கப்பட வேண்டும். பணிகள் முடிந்தவுடன், அதுகுறித்த விரிவான அறிக்கையை புகைப்படங்கள், வீடியோ ஆதாரத்துடன் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.