உதித்தது இன்னொரு திராவிட இயக்கம்... தனிக்கட்சி தொடங்கிய மல்லை சத்யா

உதித்தது இன்னொரு திராவிட இயக்கம்... தனிக்கட்சி தொடங்கிய மல்லை சத்யா
Updated on
1 min read

மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் தமிழகத்தில் இன்னொரு திராவிட கட்சி உதயமாகி இருக்கிறது.

மதிமுக-வில் துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், வைகோ மற்றும் அவரது மகன் துரைவைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மல்லை சத்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்‌. இந்த நிலையில் நேற்று, ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் தனது புதிய கட்சியை திராவிட இயக்க மூத்த தலைவர் திருப்பூர் சு.துரைசாமி மூலம் பிரகடனம் செய்தார் சத்யா.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மல்லை சி.ஏ.சத்யா அறிவிக்கப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளராக கராத்தே பழனிசாமி, முதன்மைச் செயலாளராக வல்லம் பசீர், துணை ஒருங்கிணைப்பாளர்களாக வழக்கறிஞர் சேலம் ஆனந்தராஜ், அரசு பிரபாகரன், வாசுகி பெரியார்தாசன், மாநிலச் செயலாளர்களாக ஊனை பார்த்திபன், கோடை.பி.டி.திரவியம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் மல்லை சத்யா பேசியதாவது: அரசியலில் 32 ஆண்டு காலம் ஒரு தலைவனுக்குப் பின்னால் என்னை முழுமையாக அர்ப்பணித்து, அந்த தலைவனுக்கு ஒரு மெய்க்காப்பாளனைப் போல் நான் இருந்தவன். அரசியல்படுத்தப்படாத தன் மகனுக்காக என் மீது துரோகப் பழியைச் சுமத்தி, என்னை இயக்கத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டார் அந்த தலைவன். அவர் சொன்ன ‘துரோகி’ என்ற ஒற்றைச் சொல்லால் தான், இன்றைக்கு இப்பேர்ப்பட்ட ஒரு எழுச்சி நடைபெறுகிறது. திராவிட இயக்க வரலாற்றில் இப்போது நாங்கள் புதிய சகாப்தத்தை தொடங்கி இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in