

திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அங்கம் வகித்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலில் மநீம சார்பில் போட்டியிட 60 பேர் விருப்ப மனு கட்டணம் (ரூ.50 ஆயிரம்) செலுத்தியிருந்தனர்.
ஆனால், தேர்தலில் மநீம போட்டியிடவில்லை என்று கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் விருப்ப மனு கட்டணம் செலுத்தியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், விருப்ப மனு கட்டணம் செலுத்தியவர்கள் அந்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாயின. இதற்கு பதில் அளித்த மநீம மூத்த நிர்வாகிகள், விருப்ப மனு கட்டணம் திருப்பிக்கொடுக்க கூடியது அல்ல. அது கட்சி நிதிக்கு சென்றுவிடும் என்று விளக்கம் அளித்தனர். இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கட்டணம் ரூ.50 ஆயிரம் செலுத்தியவர்களுக்கு அக்கட்டணத்தை திருப்பிக் கொடுக்க மநீம கட்சி முன்வந்துள்ளது. இதுதொடர்பாக விருப்ப மனு கட்டணம் செலுத்திய நபர்களுக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தவர்கள் தாங்கள் செலுத்திய கட்டணத் தொகையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 8 (இன்று) முதல் 16-ம் தேதிக்குள் நேரில் வந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்’ என கூறப்பட்டுள்ளது.