“கமல்ஹாசனின் பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்” - முதல்வர் ஸ்டாலின்

“கமல்ஹாசனின் பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்” - முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: ‘பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் கமல்ஹாசனின் பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்’ என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.

இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான்.

அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பின்னர் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “ முதல்வரும், துணை முதல்வரும் மிகவும் மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். நாட்டுக்கான முக்கியமான போராட்டம் இது. இந்த ஆட்சி தொடர வெண்டும் என்பதே என் விருப்பம், என் முடிவு. எனக்கு அரசியல் தொழில் அல்ல, கடமை.

தொண்டர்களின் உணர்வை புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கவும் மாட்டேன். அரசியல் களத்தில் தேர்தல் என்பது ஒரு பகுதிதான், அதுவே இறுதி கிடையாது. அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. இந்த தேர்தலில் திமுகவுக்கு வெளியில் இருந்து அழுத்தமான ஆதரவு கொடுப்போம். இந்த ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதே என் முடிவு. என்னை பெரும் மரியாதையோடு நடத்துகிறார்கள்” என்றார்.

“கமல்ஹாசனின் பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்” - முதல்வர் ஸ்டாலின்
“இது தியாகம் அல்ல” - தேர்தலில் மநீம போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in